நசீம் ஜைதி இன்று ஓய்வு பெறுகிறார்: புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நாளை பதவியேற்பு

நசீம் ஜைதி இன்று ஓய்வு பெறுகிறார்: புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நாளை பதவியேற்பு
Updated on
1 min read

தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நசீம் ஜைதி இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தேர்தல் ஆணையராக உள்ள அச்சல் குமார் ஜோதி (64) அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1975-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஜோதி, குஜராத் மாநிலத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக 1999 முதல் 2004 வரையில் கண்ட்லா துறைமுக தலைவராகவும், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவன நிர்வாக இயக்குநராக பதவி வகித்துள்ளார்.

தொழில், வருவாய் மற்றும் தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கடைசியாக, குஜராத் முதல்வ ராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அந்த மாநில தலைமைச் செயலாளராக பதவி வகித்த ஜோதி, 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, 2015-ம் ஆண்டு மே 8-ம் தேதி தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். இப்போது நாட்டின் 21-வது தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாளை பொறுப்பேற்றுக் கொள்ளும் இவர், அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார்.

தலைமை தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் ஆணையர்கள் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவி வகிக்கலாம்.

ஜோதி மற்றும் ஓம் பிரகாஷ் ராவத் ஆகிய 2 பேர் தேர்தல் ஆணையர்களாக பதவி வகித்து வருகின்றனர். இதில் ஜோதி தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த இடத்துக்கு வேறு ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in