

பெங்களூரு மத்திய சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகளைப் பெற டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கடந்த 13-ம் தேதி டிஐஜி ரூபா டி. மவுட்கில் புகார் தெரிவித்தார்.
இதனால் டிஐஜி ரூபா கடந்த 17-ம் தேதி பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, நேற்று முன்தினம் கர்நாடக பாஜக தலைவர் எடி யூரப்பா தலைமையில் அம்மாநில பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் ரூபாவின் இடமாற்றத்தை கண்டித்து பாஜக சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பெங்களூருவில் எடியூரப்பா தலைமையில் காந்தி சிலைக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை முதல்வர் அசோக், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
எடியூரப்பா பேசுகையில், ‘‘கர்நாடகாவில் நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஊழலுக்கு எதிராக செயல்பட்ட டி.கே.ரவி போன்ற அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தற்போது சிறை முறைகேட்டை வெளியே கொண்டுவந்த டிஐஜி ரூபாவை இடமாற்றம் செய்துள்ளனர். ஊழலுக்குத் துணைபோகும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசிடம் மத்திய அரசு உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும்'’ என்றார்.