

‘பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மீண்டும் வாய்ப்புத் தரக்கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, அதனை மாற்றிக் கொள்ள அதே ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி வரை பொதுமக்களுக்கு வாய்ப்புக் கொடுத்தது. இதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டாலும் இதனால் பலதரப்பினரும் பாதிக் கப்பட்டனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பழைய ரூபாய் நோட்டுகளை உண்மையான காரணங்களால் மாற்றிக் கொள்ள இயலாதவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாமா என உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக் களுக்கு வாய்ப்பு வழங்கினால் அது பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்துக்கு எதிராகவும் அமையும்’ எனக் கூறப்பட்டுள்ளது.