சிகரெட் மீது அதிக வரி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்

சிகரெட் மீது அதிக வரி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்
Updated on
1 min read

சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் செஸ் (வரிக்கு மேல் வரி விதிப்பு) வரியின் சதவீதம் குறிப்பிட்ட வகைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் மீதான செஸ் வரி 31% ஆக உயரும்.

திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 19வது கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு இன்று (ஜூலை 18) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த செஸ் வரி, சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் 28% ஜிஎஸ்டியுடன் கூடுதலாக இருக்கும். சிகரெட் மீதான செஸ் உயர்வுக்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து நிர்வாகக் குழு தன் பரிந்துரையில் கூறும்போது, ''28.7 சதவீத சராசரி வாட் வரியோடு, சிகரெட் மீதான ஜிஎஸ்டி வரி 28% ஆக இருக்கலாம். அத்துடன் இழப்பீட்டு செஸ் வரியானது, 1.05 மடங்கு கலால் வரியளவில் சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும்.

இதனால் சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் மொத்த வரி நிகழ்வானது ஜிஎஸ்டிக்கு முன்னர் இருந்ததைவிட, தற்போது குறைந்துள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களின் வரி விகிதம் குறைவது ஆரோக்கியமான நிகழ்வு, அதே நேரத்தில் சிகரெட் போன்ற பொருட்களின் விலைக் குறைவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் சிகரெட்டுகள் மீதான இழப்பீடை சரிக்கட்ட செஸ் வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in