

‘‘பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராக இருக் கிறது’’ என்று மக்களவையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் எச்சரித்தார்.
சிக்கிம் பகுதியில் சீனா சாலை போடும் முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத் தினர். இருதரப்பினரும் எல்லைப் பகுதியில் ராணுவத்தினரைக் குவித்துள்ளனர். அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பிரச்சினையை மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது எழுப்பி, சமாஜ்வாதி எம்.பி.யும் மத்திய பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான முலாயம் சிங் பேசியதாவது:
இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவுகிறது. சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை சந்திக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதை நாடாளு மன்றத்தில் அரசு விளக்க வேண்டும். பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு இந்தியா மீது போர் தொடுக்க முழு அளவில் சீனா தயாராகி உள்ளது.
சீனாதான் மிகப்பெரிய எதிரி, பாகிஸ்தான் அல்ல. காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் ராணுவத் துடன் சீன ராணுவம் கைகோத் துள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தானில் சீனா தனது அணு ஆயுதங்களைப் புதைத்து வைத்துள்ளது. இதுகுறித்து என்னை விட இந்திய புலனாய்வு ஏஜென்சிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
சீனாவின் ஒரு அங்கம்தான் திபெத் என்பது இந்தியாவின் கொள்கையாக உள்ளது. இது மிகப் பெரிய தவறு. தற்போது திபெத் சுதந்திர பகுதியானது என்பதை பகிரங்கமாக இந்தியா அறிவிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. திபெத் விஷயத்தில் இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முலாயம் சிங் யாதவ் பேசினார்.