Published : 11 Jul 2017 08:03 AM
Last Updated : 11 Jul 2017 08:03 AM

சீன எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சீனா, பூடான் தூதர்களுடன் ராகுல் சந்திப்பு: ‘மரியாதை நிமித்தம்’ என காங்கிரஸ் விளக்கம்

சீன எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள சீனா மற்றும் பூடான் நாட்டு தூதர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடானின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோகா லா பகுதிக்கு சீனாவும் பூடானும் உரிமை கொண்டாடுகின்றன. அப் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி யதால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், சீன தூதரை ராகுல் காந்தி சந்தித்ததாகவும் இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றம் பற்றி ஆலோசித்ததாகவும் அந்த தூதரக இணையதளத்தில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் அந்த தகவல் இணைய தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

காங்கிரஸ் ஒப்புதல்

இதனிடையே, இந்த சந்திப்பு குறித்து பாஜக விமர்சனம் செய்தது. இந்நிலையில் சீன தூதருடன் ராகுல் சந்தித்ததாக வெளியான தகவலை காங்கிரஸ் கட்சி நேற்று காலை மறுத்தது. ஆனால் மாலையில் உண்மைதான் என ஒப்புக்கொண்டது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறியதாவது:

சீன தூதர் லூ ஜாவ்ஹுய், பூடான் தூதர் வெட்சாப் நம்கியெல் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.

பக்கத்து நாட்டு தூதர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அவ்வப்போது சந்திப்பது வழக்கம். அதுபோல இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.

மேலும் ஜி5 நாடுகள் குழுவில் இடம்பெற்றுள்ள (இந்தியா தவிர) சீனா, பிரேசில், மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தூதர்களையும் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் சர்ச்சை யாக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற சந்திப்புகளை யாரும் அரசிய லாக்கவோ, சர்ச்சையாக்கவோ கூடாது.

அதேநேரம், ராகுல் காந்தியும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் நாட்டு நலனில் முழு விழிப்புணர்வு கொண்டுள்ளனர். குறிப்பாக, சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இவ்வாறு ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

ஊஞ்சலில் உட்கார முடியாது

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், “ஆயிரக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந் துள்ள நிலையில், பிரதமர் மோடி யைப் போல ஊஞ்சலில் அமைதி யாக உட்கார்ந்திருக்க முடியாது (2014-ல் இந்தியா வந்திருந்த சீன அதிபரும் மோடியும் ஊஞ்சலில் அமர்ந்திருந்த படத்தை வெளியிட்டுள்ளார்). இக்கட்டான இந்த நிலை பற்றி அந்த நாட்டு தூதரிடம் எடுத்துக் கூறுவது எனது கடமை” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x