துப்பாக்கி குண்டு யாருடைய மதத்தையும் பார்ப்பதில்லை: காஷ்மீரில் 50 அமர்நாத் யாத்ரீகர்களைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் உருக்கம்

துப்பாக்கி குண்டு யாருடைய மதத்தையும் பார்ப்பதில்லை: காஷ்மீரில் 50 அமர்நாத் யாத்ரீகர்களைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் உருக்கம்
Updated on
3 min read

‘‘துப்பாக்கி குண்டு மதம் பார்ப்பதில்லை; எனக்கும் தெரியாது’’ என்று காஷ்மீரில் 50 அமர்நாத் யாத்ரீகர்களைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் சலீம் மிர்சா உருக்கத்துடன் கூறினார்.

காஷ்மீரில் கடந்த திங்கட்கிழமை அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் இறந்தனர். எனினும், பேருந்தை நிறுத்தாமல் பத்திரமான இடத்துக்கு குஜராத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சலீம் மிர்சா ஓட்டிச் சென்றார். அதனால் 50 யாத்ரீகர்கள் உயிர் தப்பினர். அந்த பயங்கர தாக்குதல் குறித்து சலீம் மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். செவ்வாய்க்கிழமை முழுவதும் அரசியல் தலைவர்கள் பலர், தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து பல விஷயங்களைக் கூறினர். அரசியலை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என் பேருந்தில் இருந்த 50 பயணிகளை காப்பாற்றினாலும், எல்லா பயணிகளையும் காப்பாற்ற முடியாமல் போனதால் சோகத்தில் இருக்கிறேன்.

தீவிரவாதிகள் தாக்குதலில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய வர்கள் என்னிடம் வந்து நன்றி தெரிவித்தனர். பெரும்பாலானோர், ‘சலீம்பாய் உங்களுக்கு சலாம்’, ‘பாய்ஜான், நீங்கள் எங்கள் உயிர்களைக் காப் பாற்றி விட்டீர்கள்’ என்று கூறினர். அதற்கு நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். ஏனெனில், அங்கு பார்த்த ரத்தம், மரணங்களால் நான் பீதியில் இருந்தேன்.

தாக்குதல் நடந்த 90 நிமிடங் களுக்குப் பிறகுதான், என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சூரத் விமான நிலையம் வந்தடைந்தபோது, மதிப்பிற்குரிய முதல்வர் கூட என்னிடம் பேசினார். வீரதீர விருதுக்கு என்னுடைய பெயரைப் பரிந்துரைப்பதாகக் கூறினார்கள்.

நேர்மையாக சொல்ல வேண்டு மானால், கிளீனர் இருக்கையில் அமர்ந்திருந்த பேருந்து உரிமையா ளரின் மகன் ஹர்ஷ்பாய்தான் அதற்கு காரணம். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியவுடன், பேருந்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டும்படி அவர்தான் கூறினார். அத்துடன் குனிந்து கொள்ளும்படி யும் கத்தினார். சில துப்பாக்கிக் குண்டுகள் பேருந்து மீது பாய்ந்த தும், நான் தரையில் குனிந்துவிட் டேன். ஆனால், ஸ்டீயரிங்கை கைகளில் பிடித்துக் கொண்டேன்.

பேருந்து எங்கு செல்கிறது என்பது கூட எனக்கு தெரியாது. அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ஹர்ஷ்பாய் சாய்ந்துவிட் டார். நான் மட்டும் குனிந்திருக் காவிட்டால், அந்த குண்டுகள் என் மீது பாய்ந்திருக்கும். ஹர்ஷ்பாயின் சமயோசித புத்தி ஆச்சரியமானது.

பேருந்தின் வலது பக்கத்தில் இருந்து கல் வீசுகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். சில வினாடிகளில் அவை துப்பாக்கி குண்டுகள் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வலது பக்கத்தில் இருந்து சரமாரியாக துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இரண்டு விநாடிகளுக்குள் 40 குண்டுகளாவது பாய்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அமர்நாத் யாத்திரீகர்களை அழைத்து வரும் வழியில் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அதை சரி செய்வதற்கு இரண்டரை மணி நேரம் தாமதமாகி விட்டது. இரவு 8 மணியானதால் பெரும்பாலான யாத்ரீகர்கள் தூங்கிவிட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது யாத்ரீகர்கள் அலறினர். அவர்களுக்குள் வாக்குவாதம்கூட ஏற்பட்டது. அவர்களும் எனக்கு உத்தரவிட்டபடி இருந்தனர். ஆனால், கடவுள் என்னை வழிநடத்தியதால் பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டுவதில் கவனம் செலுத்தினேன். இரண்டு கி.மீ. தூரம் சென்றதும் ராணுவத்தினர் இருப்பதை பார்த்தேன்.

அங்கு பேருந்தை நிறுத்தி ராணுவத்தினரிடம் ஓடிச் சென்று நடந்த விஷயத்தை கூறினேன். அவர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். அவர்கள் எனக்கும் யாத்ரீகர்களுக்கும் தைரியம் கூறினர், மனதளவில் மிகுந்த ஆறுதலாக இருந்தனர். எல்லோரும் வந்து எனக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால், நான் ஒன்று சொல்கிறேன்.. ராணுவ வீரர்கள் மத்தியில் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர வைத்தனர். அவர்கள் மிகவும் ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் மிகவும் துணிவு மிக்கவர்கள்.

என்னுடைய பெயரையும், தொலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டனர். பேருந்து மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என்று உறுதி அளித்தனர். தீவிரவாதிகளைப் பிடித்த பின்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளை நமது ராணுவத்தினர் பிடித்த பின்னர், அந்தச் செய்தி உங்களுக்கு (ஊடகங்கள்) தெரிய வருவதற்கு முன்னர் எனக்கு தெரிய வரும். துப்பாக்கி குண்டோ, மரணமோ வரும்போது யாருடைய மதத்தையும் பார்ப்பதில்லை. அவை சாதாரணமாக வரும். அவை வரும்போது மதத்தை நீங்கள் நினைப்பதில்லை. உங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம், மற்றவர்களை எப்படி காப்பாற்றலாம், சிக்கலான நேரத்தில் எப்படி உதவி செய்யலாம் என்றுதான் யோசிப்பீர்கள்.

வன்முறைகள், ரத்தத்தை பார்த்து சோகமாகி விட்டேன். ஏழு பேரை இழந்துவிட்டோம். அதனால் கடவுளுக்குக் கூட நான் நன்றி சொல்லவில்லை. அவர்கள் ஆத்மாக்களுக்கு கடவுள் அமைதி அளிக்கட்டும். நான் உயிருடன் திரும்பியதால் என் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சிதான். என்னுடைய தர்மா, நம்பிக்கை எல்லாம் நான் செய்யும் வேலைதான்.

நான் இந்தியன், அதற்காகப் பெருமைப்படுகிறேன். நமது நாட்டில் சாந்தி நிலவ வேண்டும். அப்போதுதான் என்னைப் போன்ற மக்கள் அமைதியான முறையில் சம்பாதிக்க முடியும். வல்சாத்தில் (குஜராத் நகரம்) நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதனால்தான் நான் அமர்நாத் சென்றேன். இதற்கு முன்னர் 4 முறை அமர்நாத் சென்றுள்ளேன்.

கடவுள் என்னைக் காப்பாற்றி னார். அல்லாவும் சிவனும் என்னை வழிநடத்தினார்கள். நான் அறிவாளி இல்லை. ஆனால், எங்கிருந்து துணிச்சல் வந்தது என்று தெரியாது. அமர்நாத் தரிசனத்துக்குக் கூட சென்றுள்ளேன். அங்கு தந்த பிரசாதத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று என் குடும்பத்தாருக்கு கொடுத்தேன். அரசியல்வாதிகள் போல் விமர்சனம் செய்வதற்கு நான் படிப்பாளி இல்லை. என்னால் சொல்ல முடிந்தது எல்லாம், நான் ஒரு இந்தியன், அதற்காகப் பெருமைப்படுகிறேன் என்பதுதான்.

அல்லாவும் சிவனும் விரும்பினால் அமர்நாத்துக்கு மீண்டும் செல்வேன்.

இவ்வாறு பேருந்து ஓட்டுநர் சலீம் மிர்சா உருக்கத்துடன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in