Last Updated : 08 Jul, 2017 10:20 AM

 

Published : 08 Jul 2017 10:20 AM
Last Updated : 08 Jul 2017 10:20 AM

ரயில் டிக்கெட் கட்டண சலுகையை விட்டுக் கொடுங்கள்: மூத்த குடிமக்களைப் போல் மற்ற 52 பிரிவினரிடமும் கேட்க ரயில்வே ஆலோசனை

ரயில்வே கட்டணச் சலுகையை மூத்த குடிமக்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என்று ரயில்வே அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் மற்ற சலுகைதாரர்களுக்கும் இதே வேண்டுகோள் விடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப் படுகிறது. மூத்த குடிமக்கள் விரும்பினால் இந்த சலுகையை விட்டுத்தரலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது தொடர் பாக மூத்த குடிமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதற்கான வசதி, முன்பதிவுக்கான விண்ணப்பங்கள் மற்றும் இணைய தளத்தில் செய்யப்பட்டது.

மூத்த குடிமக்களைப் போல ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், பத்திரிகையாளர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், கல்விச் சுற்றுலா செல்வோர் என மொத்தம் 53 வகையான பிரிவினருக்கு தற்போது கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சலுகையை விட்டுத்தருமாறு மூத்த குடி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது போல், பிறருக்கும் வேண்டுகோள் விடுப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “சரக்கு ரயில்களில் லாபம் கிடைத்தாலும், பயணிகளுக்கான ரயில் போக்குவரத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. இதை சரிகட்டும் முயற்சியாக, கட்டண சலுகையை மற்றவர்களும் தாமாக முன்வந்து விட்டுத்தருவதற்கான வேண்டுகோள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மற்ற அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். அவர்களின் பதில்களுக்காக காத்துள்ளோம். பதில் கிடைத்த பின்பே இறுதி முடிவு எடுப்போம்” என்று தெரிவித்தனர்.

ரயில் கட்டணச் சலுகை களை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களே ஏற்க வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 24-ல் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியது.

உதாரணமாக, பத்திரிகை யாளர், உடல் ஊனமுற்றோர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், மாணவர்கள் ஆகியோருக்கான சலுகைகளை முறையே செய்தி - மக்கள் தொடர்பு துறை, சமூக நீதித் துறை, சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாடுத் துறை ஆகியவை ஏற்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை இதற்கு பதில் தரப் படவில்லை. இதை ஏற்கும் மனநிலையில் எந்த அமைச்சகமும் இல்லை என்பதே இதற்கு காரணம் ஆகும்.

சலுகையை தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் முறையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகம் செய்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பெயரளவில் இருந்த கோரிக்கையை மோடி கையில் எடுத்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இதன் பலனாக தற்போது 1.2 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மற்ற துறை களிலும் இதை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்தது. இந்த வகையில் ரயில்வே அமைச்சகம், தனது நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்சியாக இத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதேபோல், எம்.பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் தங்கள் விமானப் பயணங்களில் உயர்வகுப்புகளை தவிர்த்து, சாதாரண வகுப்பில் பயணம் செய்யுமாறு முந்தைய ஆட்சியில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மட்டும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொது மக்களிடையே புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x