

இஸ்லாம் மதம் குறித்த சர்ச்சைப் பதிவால் கொல்கத்தாவை அடுத்துள்ள வடக்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் நிலவி வரும் பதட்டத்தை அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பியுள்ளார்.
அங்கு நிலைமை அபாயகரமாக இருப்பதாகவும், அவற்றைச் சரிசெய்யும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
வடக்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் உள்ள ருத்ரபூர் என்னும் கிராமத்தில் உள்ள செளவிக் சர்க்கார் என்னும் இளைஞர் இஸ்லாமியத்தைக் குறித்தும், நபிகள் நாயகத்தைப் பற்றியும் சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சர்க்கார் கைது செய்யப்பட்டார். ஆனாலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாவட்டத்துக்கு 400 பிஎஸ்எப் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய மூத்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரி, ''பஷிர்ஹத், ஸ்வரூப்நகர், பதூரியா, தேவகங்கா பகுதிகளுக்கு பிஎஸ்எப் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேற்கு வங்க பூசலில் யாரும் கொல்லப்படவில்லை. அதிக காயமும் ஏற்படவில்லை.
இங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகள் இயங்கவில்லை. டெண்டூலியா மற்றும் ஸ்வரூப்நகர் பகுதிகளில் உள்ள இந்து மற்றும் முஸ்லின் சமூகங்களின் உறுப்பினர்களின் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன'' என்றார்.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்க ஜமாத்- இ- இஸ்லாமியின் தலைவர் மொகமது நூருதீன், சமூக ஊடகங்களைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாம் குறித்த பதிவை 'வெறுப்பையும், வன்முறையையும் பரப்பும் செயல்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.