

மணமகன் பாலியல் வழக்கில் சிக்கியவர் என்று கேள்விப்பட்ட தும், திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண். இதனால் உத்தர பிரதேச கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் தியோரனியா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது புலானியா கிராமம். இங்கு வசிப்பவர் பானு பிரதாப் (24).
நவாப்கஞ்ச் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக் கும் பானு பிரதாப்புக்கும் கடந்த சனிக்கிழமை மாலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் குந்த்ரா கிராமத்தில் தடபுடலாக செய்யப்பட்டன. தாலி கட்டுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வந்த மணமகளின் உறவினர் ஒருவர், ‘மணமகன் பானு பிரதாப் பலாத்கார வழக்கில் சிக்கியவர்’ என்ற தகவலைத் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த மணமகள், பெண்களை மதிக்கத் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்தார். தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் போலியானது, உறவினரே உள்நோக்கத்துடன் கொடுத்துள்ளார் என்று மணமகளிடம் பானு பிரதாப்பும் அவரது குடும்பத்தாரும் உண்மையை எடுத்துக் கூறினர். எனினும், அதை மணமகள் ஏற்காமல் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசியில் பஞ்சாயத்தாரின் உதவியுடன் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை இரு வீட்டாரும் பரஸ்பரம் திருப்பிக் கொடுக்க முடிவானது. இதற்கிடையில் பரதாரி போலீஸ் நிலைய அதிகாரி விமலேஷ் சிங் கூறும்போது, ‘‘கடந்த ஜூன் மாதம் பானு பிரதாப் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கும்போது பிறழ் சாட்சியம் அளித்தார். அதனால் வழக்கை முடித்து வைக்கும் நிலையில் இருந்தோம். பானு பிரதாப் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டவை என்று விசாரணையில் தெரிய வந்தது’’ என்றார்.
பொய் புகாரால் இளைஞருக்கு நடக்க இருந்த திருமணம் நின்று போனதால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.