Last Updated : 02 Jul, 2017 03:43 PM

 

Published : 02 Jul 2017 03:43 PM
Last Updated : 02 Jul 2017 03:43 PM

ஜார்க்கண்ட் மாட்டிறைச்சி வியாபாரி கொலை சம்பவம்: உள்ளூர் பாஜக நிர்வாகி கைது

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கரில் ஒரு கும்பலால் மாட்டிறைச்சி வியாபாரி தாக்கிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உள்ளூர் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இன்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமையன்று ராம்கர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பஜார் டண்ட் பகுதியில் மேற்குவங்க பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திய 30 பேர் கொண்ட கும்பல் வாகன ஓட்டுநரை வெளியே இழுத்துள்ளனர். அவர் வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருக்கலாம் என்று சந்தேகித்த அந்தக் கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கிக் கொன்றது.

இவ்வழக்கில் உள்ளூர் பாஜக நிர்வாகி நித்யானந்த் மஹாடோவுடன் சந்தோஷ் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான சோட்டு ராணா ராம்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஏற்கெனவே இன்னொரு நபர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என காவல்துறை கண்காணிப்பாளர் கிஷோர் கௌஷல் சனிக்கிழமை தெரிவித்தார்.

கும்பலால் தாக்கிக்கொல்லப்பட்ட இறைச்சி வியாபாரி முகமது (40), அலிமுதீன் ஹசாரிபாக் மாவட்டம், மானுவா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஓட்டி வந்த வாகனம் மேற்கு வங்க மாநில பதிவு எண் கொண்டது. அந்த வாகனத்திற்கு அக்கும்பல் தீவைத்தது. மாவட்ட நிர்வாகம் ராம்கர் நகரின் பாஜார் டண்ட் கூடுதல் பாதுகாப்புப் படையினரை நிறுத்தியது.

அங்கு வெள்ளிக்கிழமை பதற்றமான சூழ்நிலை நிலவியதால், குற்றவியல் நடைமுறைச்சட்டம் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராம்கர் நகரின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும், பாதுகாப்புப் படைகளும் இப்பகுதியில் உள்ள 33 முக்கிய இடங்களில் உள்ளன.

சமீபத்தில் மாட்டை வெட்டியதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு நபர் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவமும் ராம்கரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x