

கோவாவில் 15 ஆண்டுகளாக வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண், உள்ளூர் மக்களின் தலையீட்டுக்குப் பிறகு காவல்துறையால் மீட்கப்பட்டார்.
இதுகுறித்துப் பேசிய குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் காஷ்யப், ''கோவாவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கண்டோலிம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து சுனிதா வெர்லேக்கர் என்னும் பெண் மீட்கப்பட்டார். அவர் வீட்டில் பூட்டப்பட்ட அறைக்குள் சுமார் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தற்போது 45 வயதாகிறது.
அதே வீட்டில் இருந்த சுனிதாவின் சகோதரர் அவருக்கு உணவளித்து வந்துள்ளார். அதே நேரத்தில் அவரை நாங்கள் மீட்கும்போது உடை இல்லாமல் இருந்தார். அங்கு மின்சாரமும் இல்லை. அறை முழுவதும் சிறுநீரின் துர்நாற்றம் உறைந்திருந்தது. கதவில் உள்ள ஓட்டை வழியாக அவருக்கு உணவளிக்கப்பட்டுள்ளது.
சுனிதாவின் நிலை குறித்து எங்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்றின் வழியாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் சென்று சுனிதாவை மீட்டனர்.
பின்னர் அவர் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார். அதற்குப் பின்னர் மாநில அரசுக்குச் சொந்தமான மனநல மற்றும் மனித நடத்தை நிறுவனத்துக்கும் அவரை அனுப்பியுள்ளோம்.
சுனிதாவின் சகோதரர் மோகன்தாஸ் வெர்லேக்கர் மீது 342-ம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.