

கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தொடங் கியது. இதனால் கர்நாடகாவில் மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
இவ்வழக்கு கடந்த அக்டோபரில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு, ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்க்கும் மாநில அரசுகளின் மேல்முறையீட்டு, மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கிய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது' என வாதிட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது' என உத்தரவிட்டனர்.
மேலும் கடந்த மார்ச் 21-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுக்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் மனு, காவிரி நீரை திறக்க மறுத்த கர்நாடகாவிடம் ரூ.2480 கோடி இழப்பீடு கோரும் மனு உள்ளிட்ட அனைத்து மனுக்கள் மீதும் ஜூலை 11-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்.
இந்த மனுக்கள் மீது 15 நாட்கள் தொடர்ச்சியாக 4 மாநில அரசுகளும் இறுதி வாதம் செய்த பிறகு, தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை கர்நாடக அரசு ஜூலை 11-ம் தேதி வரை தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்துவிட வேண்டும்' எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் பரபரப்பு ஏற்பட்டது.
மறு ஆய்வு செய்யும் தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், ‘‘கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை கர்நாடக அரசும், மக்களும் ஏற்க மறுத்துள்ளனர். நீர் பங்கீட்டில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெரும் கலவரம் ஏற்பட்டது. எனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
காவிரி நதி நீர் பங்கீட்டில் தொடக்கக் காலத்தில் ஏற்பட்ட மெட்ராஸ் மாகாணம், மைசூர் மாகாணம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. ஆனால் காவிரி நடுவர் நீதிமன்றம் அந்த ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டும், நதிநீர் பங்கீட்டை முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் மக்கள் காவிரி நீரை நம்பியுள்ள னர்.
வறட்சிக் காலங்களில் காவிரி நீரின்றி மக்களும், விவசாயிகளும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது உள்ள மக்கள் தொகை, நீர் பயன்பாடு ஆகியவற்றுக்கு முரணாக அளிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இதே போல மாநில அரசின் உரிமைக்கு எதிரான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவையும் திரும்ப பெற வேண்டும்' என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் 15 நாட்களில் முடிக்கப்பட வேண்டும். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களது வாதத்தையும், விளக்கத்தையும் நீதிமன்றத்தில் முன்கூட்டியே தாக்கல் செய்யலாம்' எனக்கூறி வழக்கை புதன்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.
கர்நாடகாவில் பதற்றம்
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இறுதி விசாரணை தொடங்கியதால் கர்நாடகாவில் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணை களில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீர் திறப்பதைக் கண்டித்து விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் மண்டியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை போலீ ஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் தென் கர்நாடகாவில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.