

நாட்டின் 14 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் ராம்நாத் கோவிந்த் மற்றும் மீரா குமார் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவு 20-ம் தேதி வெளியாகும்.
இப்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடி வடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் நாளை நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதன்படி, நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 20-ம் தேதி எண்ணப் பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டி யிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (776) மற்றும் மாநில (டெல்லி, புதுச்சேரி உட்பட) சட்டப்பேரவை உறுப்பினர்கள் (4,120) இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில் 50 சதவீத (5,49,442) வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார்.
இந்நிலையில், பாஜக கூட்டணிக் கட்சிகள் தவிர, அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், ராம்நாத் கோவிந்த் 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க் கப்படுகிறது.