

‘‘நாட்டில் இந்துக்கள், பிரதமர் மோடி, பாஜக.வுக்கு எதிராக சகிப்பின்மை, கொலை என்ற பெயர்களில் சதி நடக்கிறது. இரண்டு கொள்கைகளுக்குள் போர் நடக்கிறது. அதில் பாஜக வெற்றி பெறும்’’ என்று டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சகிப்பின்மை - சட்டவிரோத கும்பல் நடத்தும் படுகொலைகள், அவற்றை எப்படி எல்லாம் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்பது தொடர்பாக டெல்லி பாஜக சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோனிகா அரோரா உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா பேசுகையில் கூறியதாவது:
நாட்டில் அரசியல் ஆதாயங்களை பெறுவதற்காக, சகிப்பின்மை, சட்டவிரோத படுகொலைகள் என்ற பெயரில் இந்துக்கள், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக.வுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடக்கிறது. தற்போது 2 கொள்கைகளுக்குள் போர் நடக்கிறது. நாட்டை துண்டாட நினைக்கும் கொள்கைக்கும், தேசப்பற்றாளர்களுக்கும் இடையில் போர் நடக்கிறது.
இதில் தேசப்பற்றாளர்கள் வெற்றி பெறுவார்கள். ஏனெனில், நாங்கள் உண்மையின் பக்கத்தில் இருக்கிறோம். இது சாதாரண போர் அல்ல. இந்திய தேசம், இந்துக்கள், பிரதமர் மோடி, பாஜக.வுக்கு எதிராக திட்டமிட்டு நடக்கும் சதி.
ஜம்மு காஷ்மீர் நிலவரங்களை திரித்து கதைக்கட்டிவிட காங்கிரஸ் முயற்சிக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் சைபுதீன் சோஸ், மணிசங்கர் அய்யர், சந்தீப் தீக்சித் ஆகியோரின் அறிக்கைகளே அதற்கு சான்று.
மேற்கு வங்கத்தில் மதச்சார்பின்மை என்ற பெயரில் நாட்டில் அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வகாபிசம், சலாபிசத்தை ஊக்குவிக்கின்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனங் களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை முறைப்படுத்த பிரதமர் மோடி அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது கூட நாட்டில் சகிப்பின்மை, சட்டவிரோத கொலைகள் நடப்பதற்கு காரணம்.
இவ்வாறு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறினார்.
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி பேசும்போது, ‘‘அறிவு, நாட்டுப்பற்றின் மையமாக இருந்த மேற்குவங்கத்தில், தற்போது மம்தா பானர்ஜியின் அரசியல் விளையாட்டால் நிலைமை மாறிவிட்டது. மம்தா என்ன செய்திருக்கிறார் (பசிர்ஹத் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் வன்முறை கலவரம்) என்பதை அறிந்த பிறகு யாரும் அவரை ‘தீதி’ (அக்கா) என்று அழைக்க மாட்டார்கள். எனினும் சீனாவுடனான எல்லை பிரச்சினையாகட்டும், உள்நாட்டு பிரச்சினைகளாகட்டும் எந்த சவாலையும் சமாளிக்கும் எல்லா திறமைகளும் பிரதமர் மோடிக்கு உள்ளது’’ என்றார்.
மருத்துவராக இருந்து அரசியலுக்கு..
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களில் சிறந்த மாணவராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். அதன்பின் எம்எஸ் பட்டம் பெற்று அறுவை சிகிச்சை நிபுணரானார். பின்னர் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று, டெல்லியில் உள்ள இந்துராவ் மருத்துவமனையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அங்கு பணியாற்றிக் கொண்டே கடந்த 2006-ம் ஆண்டு ‘ஸ்வராஜ்’ என்ற அரசு சாரா அமைப்பைத் தொடங்கினார். ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் தலித், ஆதிவாசிகளின் கல்வி, உடல்நலத்தை மேம்படுத்தும் பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டது. பின்னர் பாஜக.வில் சேர்ந்தார். கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி காஷ்மீரி கேட் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், இந்தத் தேர்தலுக்கு முன்னதாக 2010-ம் ஆண்டு டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக.வுக்குத் தீவிர பிரச்சாரம் செய்தார். அதன்பின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.