Last Updated : 25 Nov, 2014 10:15 AM

 

Published : 25 Nov 2014 10:15 AM
Last Updated : 25 Nov 2014 10:15 AM

நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் கருப்பு பணம் மீட்பு, காப்பீடு, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாக்கள், தொழிலாளர் நலச் சட்டத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனால், இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வசதியாக, மாநிலங் களவையில் இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி திரிணமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதா தளமும் நோட்டீஸ் அளித்துள்ளன.

மாநிலங்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய வுள்ள தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் செய்தித்தொடர் பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, “காப்பீடு மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு கண்மூடித் தனமாக ஆதரவு அளிக்க மாட்டோம்.

எங்களின் கேள்விக்கு அரசு அளிக்கும் பதில் திருப்தியாக இருந்தால் மட்டுமே ஆதரவு அளிப்போம்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு தயாரித்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை, அதே வடிவத்தில் பாஜக அரசு தாக்கல் செய்கிறதா அல்லது மாற்றம் செய்துள்ளதா என்பதை அறிந்த பிறகே, அதை ஆதரிப்பது பற்றி முடிவு செய்வோம்.

காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீ தமாக உயர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதா, எதிர்ப்பதா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

காப்பீடு மசோதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திரிணமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதா தளமும் முயற்சி மேற் கொண்டு வருகின்றன.

ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறும்போது, “காப்பீடு மசோதாவை நாங்கள் எதிர்க்கி றோம்.

தொழிலாளர் நலச் சட்டத்தில் மாற்றும் கொண்டு வருவதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும். அதற்காக இடதுசாரிக் கட்சிகளிடமும், வேறு சில கட்சிகளிடமும் பேச்சு நடத்தி வருகிறோம்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது கருப்பு பணத்தை மீட்பது குறித்து பேசித்தான் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு அது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங் களவையில் செவ்வாய்க்கிழமை (இன்று) கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அளித் துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x