

குஜராத் மழை வெள்ளத்தில் சிக்கி சனிக்கிழமை மாலை முதல் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 6 பேரது நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடும் மழை காரணமாக மாநிலத்தில் பல பகுதிகளும் வெள்ளக்காடானது. முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. சில நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 6 பேரது நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை என மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணிகளின் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 120 கிராமங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 2000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மேலும் இரண்டு நாட்களுக்கு குஜராத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.