சசிகலாவின் பெயரை தொடர்ந்து கெடுத்தால் டிஐஜி ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பேன்: அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ஆவேசம்

சசிகலாவின் பெயரை தொடர்ந்து கெடுத்தால் டிஐஜி ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பேன்: அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ஆவேசம்
Updated on
2 min read

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவின் பெயரை தொடர்ந்து கெடுத்தால் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பேன் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

பெங்களூரு சிறையில் கூடுதல் வசதிகளை பெறுவதற்காக, அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் ரூ.2 கோடி லஞ்சம்‌ கொடுத்ததாக டிஐஜி ரூபா டி.மவுட்கில் புகார் கூறியுள்ளார். இது நாடு முழுவ தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில அதிமுக (அம்மா) செயலாளரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான புகழேந்தியின் பெயர் தொடர்ந்து அடிபடுகிறது.

இந்நிலையில், ‘தி இந்து'வுக்கு புகழேந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சசிகலா சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்து, நவீன சமையலறை, அதிநவீன கருவிகள், சமையல்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகை களை பெற்று வருவதாக டிஐஜி ரூபா புகார் கடிதம் கூறியிருக்கிறாரே?

சசிகலா தொடர்பாக டிஐஜி ரூபா தெரிவித்த புகார் அனைத்தும் தவறானவை. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறுவதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. ரூபாவின் புகாரை சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவே மறுத்திருக்கிறார். துறை சார்ந்த புகாரை உயர் அதிகாரிக்கு தெரிவிக்காமல் ஊடகங்களுக்கு தெரிவித்ததை கண்டித்திருக்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமை யாவும் இதை கண்டித்து, விளக்கம் கேட்டு ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

அப்படியென்றால் டிஐஜி ரூபா, சசிகலாவுக்கு எதிராக உள்நோக்கத் துடன் புகார் கூறி இருக்கிறாரா? இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கும் என சந்தேகிக்கிறீர்களா?

டிஐஜி ரூபாவின் நேர்மை குறித்தோ, கடமை உணர்வு குறித்தோ நாங்கள் சந்தேகிக்க வில்லை. தனது புகாரை உயர் அதிகாரியிடம் தெரிவிக்காமல், ஊடகங்களிடம் சொன்னது ஏன்? சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்திருக்கிறார்கள் என்றால் அதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட‌ வேண்டியது தானே? மொத்தத்தில் ரூபா, சசிகலாவின் பெயரை வைத்து பிரபலமாகி விட்டார். சசிகலாவால் தான், ரூபாவின் பெயர் இன்று நாடு முழுவதும் தெரியவந்திருக்கிறது. இதற்காக நேர்மையான அதிகாரி யான டிஜிபி சத்தியநாராயண ராவின் பெயரையும், சசிகலாவின் பெயரையும் கெடுத்துவிட்டார்.

டிஜிபி சத்தியநாராயண ராவுடன் பழகி இருக்கிறீர்களா?

கர்நாடக காவல் துறையில் இருக்கும் கண்டிப்பான‌ அதிகாரி களில் ஒருவர் டிஜிபி சத்திய நாராயண ராவ். குற்றவியல் பிரிவு, லஞ்ச ஒழிப்புத் துறை உட்பட பல் வேறு முக்கிய துறைகளில் பணி யாற்றிய அனுபவம் வாய்ந்த‌வர். சசிகலாவை சந்திப்பது தொடர்பாக சில முறை சந்தித்து தெலுங்கில் பேசி இருக்கிறேன். என்னுடன் நல்ல முறையில் பழகினாலும் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியும் என கூறிவிட்டார். இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரி மீது, சிறைத்துறைக்கு வந்த சில நாட்களிலே எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் கூறி இருப்பது நியாயமா? எனவே தான் ரூபா மீது வழக்கு தொடுக்கப்போவதாக சத்தியநாராயண ராவ் கூறி இருக்கிறார். சசிகலாவின் பெயரை ரூபா தொடர்ந்து கெடுத்தால், நானும் மான நஷ்ட வழக்கு தொடுப்பேன்.

சிறையில் சசிகலா எந்த விதி முறையையும் மீறவில்லையா? சிறப்பு ச‌லுகையை அனுபவிக்கவில்லையா?

நிச்சயமாக இல்லை. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டபோது அவரை சந்தித்து, ‘வெளியே இருந்து உணவு கொண்டுவரட்டுமா?' என கேட்டேன். அதற்கு மறுப்பு தெரிவித்த சசிகலா, இன்று வரை சிறை உணவைதான் சாப்பிடுகிறார். வெளியே இருந்து ஒருநாள் கூட உணவு கொண்டு போகவில்லை. பிஸ்கட் துண்டை கூட தொடுவதில்லை. சசிகலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிலர் மனிதாபிமான அடிப்படையில் சில உதவியை செய்கிறார்கள். அவருக்கு ரசம், காபி வேண்டுமென்றால் சிலர் செய்து கொடுக்கிறார்கள். அதையெல்லாம் குறையாக சொல்லலாமா?

அப்படியென்றால் டிஐஜி ரூபா, சசிகலாவுக்காக சிறப்பு சமையலறை, சமையல்காரர்கள், அதிநவீன கருவிகள் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறாரே?

அது முற்றிலும் பொய். டிஐஜி ரூபா சொல்வது போல சிறையில், இவ்வளவு வசதிகளை செய்துவிட முடியாது. பரப்பன அக்ரஹாரா சிறை 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் இருக்கிறது. வெளியே ஊடகங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இடையில் ஏதேனும் நடந்தால் சும்மா விடுவார்களா?

இந்த விவகாரத்தில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

இதை நாங்கள் வரவேற்கி றோம். நேர்மையான உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமை யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.

இந்த லஞ்ச விவகாரத்தால் சசிகலாவின் சீராய்வு மனுவுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறதே?

நிச்சயமாக ஏற்படாது. இந்த விவகாரத்தில் டிஜிபி சத்திய நாராயண ராவ் லஞ்சம் வாங்க வில்லை என உறுதியாகக் கூறி இருக்கிறார். உள்துறை செயலரோ, முதல்வரோ எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. எனவே உச்ச நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டை பெரிதாக பார்க்காது.

ச‌சிகலா சார்பாக நீங்கள்தான் கர்நாடக சிறை அதிகாரி களுக்கு ரூ.2 கோடி ரூபாயை லஞ்ச மாக கொடுத்ததாகவும், அதிமுக தலைமையிடம் அதை பெற்றதாகவும் ஊடகங்களில் செய்தி உலா வருகிறதே?

ஹா..ஹா (சிரிக்கிறார்) இன்று வரை நான் ரூ.2 கோடியை முழுமையாக பார்த்தது கூட இல்லை. இதற்காக சசிகலாவி டமோ, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடமோ பெறவும் இல்லை. யாரிடமும் யாசகம் பெறும் நிலையில் நான் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in