

நிதிப் பற்றாக்குறை காரணமாக கிராமங்களைத் தத்து எடுக்க எம்.பி.க்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இத்திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 43 எம்.பி.க்கள் மட்டுமே தத்து எடுத்துள்ளனர். இவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை.
முன்மாதிரி கிராம திட்டத்தை (சன்ஸத் ஆதர்ஷ் கிராம் யோஜனா) பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014, அக்டோபரில் அறிமுகப்படுத்தினார். இதன்படி, நாடாளுமன்ற இரு அவைகளின் 788 உறுப்பினர்களும் தங்கள் பதவிக்காலத்தில் மூன்று கட்டங் களாக தலா ஒரு கிராமத்தை தத்து எடுக்க வேண்டும். இதன் முதல் கட்டத்தில் 88 சதவீத எம்.பி.க்கள் கிராமங்களை தத்து எடுத்தனர். ஆனால் இரண்டாவது கட்டத்தில் மக்களவையின் 281 எம்.பி.க்கள், மாநிலங்களவையின் 91 எம்.பி.க்கள் என 50 சதவீதமாகக் குறைந்தது. மூன்றாவது கட்டம் தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் மக்களவையில் 33, மாநிலங்களவையில் 10 என 43 எம்.பி.க்கள் மட்டுமே கிராமங் களைத் தத்து எடுத்துள்ளனர்.
பிரதமரும் தத்தெடுக்கவில்லை
இந்த திட்டத்தை விரும்பி அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதியான வாரணாசியில் ஜெயாபூர், நாகேபூர் என 2 கிராமங்களைத் தேர்வு செய்தார். எனினும் மூன்றாவது கிராமத்தை இதுவரை அவர் தத்தெடுக்கவில்லை. இந்த நிலைக்கு நிதிப் பற்றாக்குறையே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக எம்.பி.க்கள் வட்டாரம் கூறும்போது, “மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியாக நாங்கள் இருப்பதால் எங்கள் கட்சி எம்.பி.க்கள் மட்டும் மூன்று கட்டங்களிலும் கிராமங்களைத் தத்து எடுத்துள்ளனர். இந்தத் திட்டத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று மத்திய கிராம வளர்ச்சித் துறை சார்பில் கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதை நிதி அமைச்சகம் ஏற்க மறுத்து விட்டது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும் பலர் புகார் கூறியும் பலன் இல்லை. எனவே இந்த திட்டம் மூன்றாவது கட்டத்தில் தோல்வியை சந்திக்கும் நிலை உள்ளது” என்று தெரிவித் தனர்.
இந்த திட்டத்திற்கு எம்.பி.க் களின் தொகுதி மேம்பாட்டு நிதியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்துடன் தத்தெடுக்கப் பட்ட கிராமங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அமலாக்கப்படுகிறதா எனக் கண்காணித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில அரசிடம் தொகுதி எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் மிகவும் பின்தங்கிய கிராமங்கள் சற்று முக்கியத்துவம் பெற்றன. ஆனால் இந்த நிலை இரண்டாவது கட்டம் முதல் குறைந்து வரவே அந்த கிராமங்களுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச லாபமும் தடைபட்டுள்ளது.
தமிழக எம்.பி.க்கள் நிலை
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தவிர அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்து எடுத்தனர். இரண்டாவது கட்டத்தில் மக்களவையில் 4, மாநிலங்களவையில் 8 என 12 எம்.பி.க்கள் தத்து எடுத்தனர். மூன்றாவது கட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் உட்பட ஒருவர் கூட இன்னும் கிராமத்தை தத்து எடுக்கவில்லை. இத்திட்டத்தின் மீது எம்.பி.க்கள் இடையே ஆர்வம் குறைந்துவிட்ட நிலையில், மோடி மீண்டும் பிரதமரானால், ஒவ்வொரு ஆண் டும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தை அமலாக்கத் திட்ட மிட்டுள்ளார்.