

புதுடெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட யாருக்கும் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்க, விமான நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு விமான நிறுவனங்கள் சமீபத்தில் தடை விதித்தது பற்றி சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் மாநிலங்களவையில் நேற்று பிரச்சினை எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பி.ஜே.குரியன் கூறும் போது, “நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட யாருக்கும், விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்க விமான நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை. அதேநேரம் எம்.பி.க்களும் குடிமக்கள்தான்.
அவர்கள் குற்றச் செயலில் ஈடுபட் டாலோ தவறு செய்தாலோ சட்டப் படி அவர்களைத் தண்டிக்க முடி யும். ஆனால், அவர்களைத் தண் டிக்க விமான நிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார். கடந்த ஜூன் 15-ம் தேதி தெலுங்கு தேசம் எம்.பி. திவாகர் ரெட்டி, ஹைதராபாத் செல்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு தாமதமாக சென்றார். இதனால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் இண்டிகோ விமான நிறுவன ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் விமானத்தில் பயணம் செய்ய விமான நிறுவனங்கள் தடை விதித்தன. இதையடுத்து, அவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு, விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆகியவற்றுக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், திவாகர் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை விமான நிறுவனங்கள் நேற்று முன்தினம் விலக்கிக் கொண்டன.
இதுபோல கடந்த மார்ச் மாதம் சிவசேனா கட்சி எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமான நிறுவன ஊழியரைக் காலணியால் அடித்தார். இதையடுத்து அவருக்கு விமான நிறுவனங்கள் தடை விதித்தன. பின்னர் அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.