

முதல்வருக்கே குழப்பம் உண்டாக்கிய 'மும்பை நகர விவசாயிகள்' கடன் பெற்றதும் அது தள்ளுபடி செய்யப்பட உள்ளதுமான பிரச்சனை ஒன்று மஹாராஷ்டிராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு:
மகாராஷ்டிரா அரசு செவ்வாய் அன்று ஒரு சிக்கலான சூழ்நிலையை சந்தித்தது. முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடன்தள்ளுபடி ஆணையின்கீழ் பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக வெளியிட்டிருந்தார். அதில் மும்பை நகரத்திலும் அதன் புறநகரிலும் 694 மற்றும் 119 விவசாயிகள் இருப்பதாக காட்டியது. ஆனால் இது குறித்து மாநில அரசு ''நகரத்தில் விவசாயப் பண்ணைகள் ஏதும் இல்லை'' என்று விளக்கம் தரமுடியாத நிலையே நீடித்து வருகிறது.
முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், "மும்பை நகரத்திற்குள் விவசாயிகள் இருப்பதை அறிய ஆவலாக உள்ளது. மும்பையில் விவசாயிகள் இருக்கிறார்களா என்பதே கேள்வி. ஆனால் அந்த பட்டியலின் பரிந்துரைப்படி மும்பையில் பயனாளிகள் இருப்பதைச் சொல்கிறது. இதுகுறித்து ஒரு முழுமையான விசாரணை செய்ய உள்ளோம். வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான இறுதிப் பட்டியலை அதன்பிறகே நாங்கள் வழங்குவோம்" என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் வெளியான அன்று மாலை, முதல்வர் அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது. மும்பையில் விவசாயிகள் கடன்பெற்று அது தள்ளுபடிசெய்யவும் உள்ள அந்தப் பட்டியலை சரிபார்க்கப்பட உள்ளதாக முதல்வர் அலுவலக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மும்பை விவசாயிகள், இடைக்கால விவசாய கடன் பெற்றுள்ள மீனவர்கள் போன்ற பல்வேறு பிரிவின்கீழ் வருகிறார்கள். சில விவசாயிகள், கிராமப்புறங்களில் வேலை செய்து வந்தாலும் மும்பை நகரத்தில் பயிர் கடன் வாங்குவதைத் தேர்ந்தெடுக்கின்றனர். சில பழங்குடி விவசாயிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனர். தகுதி மற்றும் தேவை உள்ள விவசாயிகள் இக்கடன் தள்ளுபடியில் பயன்பெறுவார்கள் என்று மாநில அரசு உறுதி அளித்துள்ளது.
வணிக வங்கிகளிடமிருந்து இந்த மக்கள் இடைக்கால கடன்களைப் பெற்றுள்ளதற்கான சாத்தியங்கள் உண்டு. அதை அவர்கள் உண்மையிலேயே தங்கள் பண்ணை நிலத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஆனால் அவர்களின் வீடுகளோ மும்பையில் உள்ளன என்று தி இந்துவிடம் (ஆங்கிலம்) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மும்பை மாவட்டத்தைக்கூட குறிப்பிடாமல் கடன்பெற்ற விவசாயிகளின் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையுடன் கூடிய ஒரு பட்டியல் மாநில அளவிலான வங்கிக் குழுவிடமிருந்து வந்துள்ளது என்பதுதான்.
மர்மமான வகையில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளை மும்பை மாநகரம் கொண்டுள்ளது. அதேபோல புல்தானா மாவட்டத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்காளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற வகையிலாவது குறைந்தபட்சம் மாநில அரசு கவலைப்பட வேண்டும்.
மாநில அளவிலான வங்கிக் குழு புள்ளிவிவரத்தின்படி புல்தானா மாவட்டத்தில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2,35,839 உள்ளது. ஆனால் அங்கு பயன்பெற உள்ளவர்களின் எண்ணிக்கை 2,49.818.
எண்களின் விளையாட்டு
இதுகுறித்து மகாராஷ்ட்டிர மாநில காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் சச்சின் ஸ்வாந்த் கூறுகையில், இந்த அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தின் செயல்களையே இது எடுத்துக்காட்டுகிறது. பயனாளிகளின் எண்ணிக்கையில் மட்டும் அல்ல தொகை குறித்த தெளிவும் இல்லை. இந்த அரசு எண்களின் விளையாட்டில் மும்முரமாக உள்ளது.'' என்றார்.