

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இதுபோன்ற கோரிக்கை அடங்கிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளன. எனவே, சர்மாவின் மனுவையும் அதனுடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.சர்மா கூறும்போது, “அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் பொதுநல மனுவையும் சேர்த்து விசாரிக்கக் கூடாது” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறும்போது, “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் நல்லது இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவர்களும் அதைத்தான் கூறி உள்ளார்கள்” என்றனர்.
இதற்கு சர்மா கூறும்போது, “அரசியல் கட்சிகள் தாக்கல் செய் துள்ள மனுவில் எதிர்கால தேர்த லில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதியை வாக்கு இயந்திரத்துடன் பொருத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உள்ளன. ஆனால் நான் அது போன்ற கோரிக் கையை வைக்கவில்லை. இந்த மனுக்களை ஒன்றாக சேர்த்தால் என்னுடைய மனு நீர்த்துப் போய் விடும்” என்றார். இதையடுத்து, இந்த மனு மீது 2 வாரத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.