

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை போல ஆண்டுதோறும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கார்த்திகை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவின் தொடக்கமாக நேற்று காலை 9 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் யானை சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பல்வேறு தங்கம், வைர நகைகள் அலங்காரம் செய்யப்பட்டன. இதே போன்று உற்சவ தாயாருக்கும் தங்க, வைர நகைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் திருச்சானூரில் தேவஸ்தானம் சார்பில் மலர் கண்காட்சியை மாநில வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைத்தார்.
இதில் மகாபாரதம், ராமா யணம், பாகவதத்தில் உள்ள காட்சிகள் மலர்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. இது பக்தர்களை வெகுவாக கவர்ந் துள்ளது. இந்நிகழ்ச்சியில் தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், சந்திரகிரி எம்.எல்.ஏ பாஸ்கர் ரெட்டி, மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர் கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இரவு சிறிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்தியான பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று கொடியேற்றி பிரம்மோற்சவத்தை தொடங்கி வைத்த வேத பண்டிதர்கள்.