பசு இறைச்சி வைத்திருந்ததாக நாக்பூர் கிராமம் ஒன்றில் ஒருவர் மீது தாக்குதல்

பசு இறைச்சி வைத்திருந்ததாக நாக்பூர் கிராமம் ஒன்றில் ஒருவர் மீது தாக்குதல்
Updated on
1 min read

பசு இறைச்சிக் கொண்டு சென்றதாக ஒருவரை கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கிய சம்பவம் பார்சிங்கி என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து நாக்பூர் ஊரக காவலதிகாரி சைலேஷ் பல்காவாதே கூறும்போது, “சலிம் இஸ்மாயில் ஷேக், இவர் கேடோல் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது 5 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவரை பார்சிங்கி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி இருசக்கர வாகனத்திலிருந்து இறங்குமாறும் என்ன கொண்டு செல்கிறார் என்பதைக் காட்டுமாறும் வலியுறுத்தியுள்ளனர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இவரை சரமாரியாக அடித்துள்ளனர்” என்றார்.

இதனால் சலீமுக்கு கழுத்து, முகம் என்று காயமேற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் வியாழனன்று வீடு திரும்பினார்.

இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

“பாதிக்கப்பட்ட நபர் ஏதோ இறைச்சியைக் கொண்டு சென்றுள்ளார். அவர் 4 பேரைக் குறிப்பிட்டுள்ளார். வீடியோ ஆதாரத்திலிருந்து 4 பேரின் அடையாளத்தையும் கண்டுபிடித்து கைது செய்துள்ளோம். இவர்கள் எந்த ஒரு வலதுசாரி இயக்கத்தையும் சேர்ந்தவர்களல்லர். தாக்கிய நபர்களில் ஒருவர் பிரஹார் என்ற ஒரு சமூக அமைப்பின் தாலுக்கா மட்ட தலைவராக இருந்து வருகிறார். தாக்குதலுக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

அவர் வைத்திருந்தது மாட்டிறைச்சிதானா என்பதை அறிய நாக்பூர் சோதனைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். மேலும் பசுப்பாதுகாவலர்கள்தான் தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவரும், தாக்குதல் நடத்தியவர்களும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்லர். ஒருவரையொருவர் முன் பின் அறியாதவர்களே” என்று போலீஸ் உயரதிகாரி சைலேஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in