

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஒப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளின் எண்ணிக்கை குறைவு என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவாவில் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டபோது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிக்கையை வாசிப்பார். மலேசியாவுக்காக எழுதப்பட்ட அறிக்கையை அவர் தாய்லாந்தில் வாசித்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் ஏராளம்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஒப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 ஆண்டுகளில் பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளின் எண்ணிக்கை குறைவு.
மன்மோகன் சிங், சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றபோது யாருக்குமே தெரியாது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், இலங்கைக்கு சென்றபோது விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் ஒட்டுமொத்த உலகிற்கும் தெரிகிறது'' என்று அமித் ஷா தெரிவித்தார்.