

நடிகை பாவனா குறித்து அவதூறு கருத்து கூறியதாக நடிகர் திலீப் மீது கேரள மகளிர் ஆணையம் நேற்று வழக்கு பதிவு செய்தது.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல்ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக பல்சர் சுனில் உட்பட 6 பேர் கைது செய்யப் பட்டனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீபின் உத்தரவின்பேரிலேயே பாவனா கடத்தப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தி யுள்ளனர்.
இதனிடையே நடிகர் திலீப் சமூக வலைதளத்தில் அண்மை யில் வெளியிட்ட பதிவில், நடிகை பாவனாவும் பல்சர் சுனிலும் நண்பர்கள் என்று குறிப்பிட்டிருந் ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேரள மகளிர் ஆணையம், நடிகர் திலீப் மீது நேற்று வழக்கு பதிவு செய்தது. ஆணையத்தின் தலைவர் குரியாகோஸ் கூறியபோது, ‘‘பாவனா குறித்து அவதூறாக கருத்து கூறியதற்காக திலீப் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். விரைவில் விசாரணை தொடங்கும்’’ என்று தெரிவித்தார்.
பாவனா வழக்கு தொடர்பாக பல்சர் சுனிலை போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரை போலீஸ்காரர்கள் அடித்து துன்புறுத்துவதால் போலீஸ் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கொச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.