நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுபான கடைகளுக்கு தடை விதித்தது ஏன்? - உச்ச நீதிமன்றம் விளக்கம்

நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுபான கடைகளுக்கு தடை விதித்தது ஏன்? - உச்ச நீதிமன்றம் விளக்கம்
Updated on
1 min read

அதிவேக போக்குவரத்து பகுதிகளில் ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்பதற்காகவே நெடுஞ்சாலை யோரங்களில் மதுபான விற் பனைக்கு தடை விதிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுபான கடைகளை மூடும்படி கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டது.

இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மாறாக மாநில நெடுஞ்சாலையை, மாவட்ட சாலையாக பெயர் மாற்றி, அங்கு மதுபானம் விற்க சண்டிகர் மாநில அரசு அனுமதியளித்தது.

இதை ஆட்சேபித்து சண்டிகரின் பாதுகாப்பான பயண சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சாலைகளில் வித்தியாசம்

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘நகர சாலைகள், நகரங்களுக்கு வெளியே உள்ள சாலைகள் என சாலைகள் பலவகையில் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளும் இருக்கின்றன. அதிவேக போக்குவரத்து சாலை யில் மதுபோதையில் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கக் கூடாது என்பதற்காகவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் இருக்கும் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. நகர சாலைகளுக்கும், நெடுஞ் சாலைகளுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. எனவே சண்டிகர் நிர்வாகத்தின் முடிவை எதிர்ப்பது குறித்து மனுதாரர் பரிசீலிக்க வேண்டும். நாங்கள் என்ன கூறியிருக்கிறோம் என்பதை மனுதாரர் சிந்திக்க வேண்டும். இதுதொடர்பாக அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) உத்தரவிடுகிறோம்’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in