நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம் பசு பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளி

நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம் பசு பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளி
Updated on
1 min read

பசு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் துயர நிலைமை உள்ளிட் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று மக்களவை கூடியதும், காங்கிரஸ், ஆர்ஜேடி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்றனர்.

அப்போது, பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல் மற்றும் விவசாயிகளின் துயர நிலைமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர்.

3 மசோதாக்கள் அறிமுகம்

இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவை 15 நிமிடங் களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

கூச்சலுக்கு நடுவே, அசையா சொத்து கையகப்படுத்துதல் (திருத்த) மசோதா, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் பகுதிகள் (திருத்த) மசோதா, இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவன மசோதா ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் தொடர்ந்து அமளி நிலவியதால் அவையை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

மாநிலங்களவையில்…

நேற்று காலையில் மாநிலங் களவை கூடியதும் அவையின் மையப் பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கோஷமிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) பேசும்போது, “இந்த கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என பிரதமர் முன்னிலையில் அரசு உறுதி அளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி மீறப்படுகிறது” என்றார்.

இதனால் அமளி நிலவியதால், 12 மணி வரை, 2 மணி வரை, 3 மணி வரை என அடுத்தடுத்து பலமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in