

தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்து இளைஞரை காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தார். ‘கேஸ் மெட்டல் வெல்டிங்’ கற்றுக்கொண்ட அவர், பாட்டிலாயாவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காஷ்மீரில் குளிர்காலத்தின்போது இமாச்சல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அம்மாநில இளைஞர்கள் பலர் செல்வது வழக்கம்.
அவர்களுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக காஷ்மீர் சென்று பணி புரிந்தார். அவர்களில் ஒருசிலர் திருட்டு உள்ளிட்ட தவறான பாதைக்கு அவரை வழிநடத்தியுள் ளனர். மேலும் அவர்களால் மதம் மாற்றப்பட்ட நிலையில் அவரது பெயர் ‘அடில்’ என மாற்றப்பட்டது. அங்கு முஸ்லிம் பெண் ஒருவரை அவர் காதலித்துள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.
மேலும் நாட்டிற்கு எதிராக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட சர்மாவுக்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் கடந்த நவம்பர் மாதம் குல்ஹாமில் ஆயுதப் பயிற்சி அளித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வாகனத்தில் எடுத்துச் செல்லும் பணியில் சர்மா ஈடுபடுத்தப்பட்டார்.
கடந்த ஜூன் 16-ம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சபால் பகுதியில் ‘ஏடிஎம்’களுக்கு பணம் எடுத்துச் சென்ற வாகனத்தை மறித்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீஸார் கொல்லப்பட்டனர். இதில் தீவிரவாதிகள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சர்மா ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் சர்மாவின் தீவிரவாதச் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த தீவிரவாத எதிர்ப்பு படைப்பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை சந்தீப் சர்மா மற்றும் முனீப் ஷா ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக ஏடிஎஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளான ஷோபியான், குல்ஹாம், புல்வாமா உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம் கொள்ளை அதிகரித்தது. அங்கு கொள்ளை போன பணம் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. கைதான சந்தீப் சர்மா மதம் மாற்றப்பட்டு, தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது’ என்றனர்.