Last Updated : 19 Jul, 2017 09:59 AM

 

Published : 19 Jul 2017 09:59 AM
Last Updated : 19 Jul 2017 09:59 AM

பாகிஸ்தானின் சிறப்பு கடிதம் இல்லாமல் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இளைஞர் டெல்லியில் சிகிச்சை பெறுவதற்கு விசா: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இந்தியாவின் ஒரு அங்கம். அங்கு வாழும் இளைஞர் விசா பெறுவதற்கு பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகரின் கடிதம் பெற வேண்டிய அவசியமில்லை’’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ஒசாமா அலி (24). இவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற விரும்புகிறார். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு விசா பெற வேண்டும். விசா பெறுவதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ் சிறப்பு கடிதம் ஒன்று தரவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

அந்த நிபந்தனையை தளர்த்தி ஒசாமா அலிக்கு மருத்துவ அவசர விசா கிடைக்க உதவும்படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து சுஷ்மா ஸ்வ ராஜ், ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்ட பதிவில், ‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒரு அங்கம். அந்தப் பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள் ளது. ஒசாமா அலிக்கு இந்தியா விசா வழங்கும். அதற்கு யாருடைய கடிதமும் அவசிய மில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ட்விட்டரில் மேலும் கூறும்போது, ‘‘பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க அவரது தாயார் அவந்திகா பாகிஸ்தான் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளார். அது நிலுவையில் உள்ளது. அவந்திகாவுக்கு விசா வழங்கும் படி தனிப்பட்ட முறையில் சர்தாஜ் ஆசிஸுக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு பதில் கூட அவர் தெரிவிக்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்த குற்றச்சாட்டின்கீழ் குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாடு மரண தண்டனை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x