

ஜிஎஸ்டி அறிமுகம், அமலாக்க விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக் கணித்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்றது, எதிர்க்கட்சிகள் கூட்டணி சிதறுவதை வெளிப்படுத்தியுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. இதன் தொடக்க மாக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உட்பட 17 கட்சிகளை ஒன்று திரட்டி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இக்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிஹார் முதல் வருமான நிதிஷ் குமார், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில் ஜிஎஸ்டி அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இவ் விழாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், அவசரகதியில் ஜிஎஸ் டியை அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இவ்விழாவை புறக் கணிப்பதாக காங்கிரஸ் அறிவித் தது. இதையடுத்து, இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணித்தன.
இதுகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆனால் மத்திய அரசு சுய விளம்பரத்துக்காக அவசர கதியில் நிறைவேற்றுகிறது” என பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, திட்டமிட்டபடி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், ஐக்கிய ஜனதா தள கட்சிப் பிரதிநிதி ஆகியோர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அப்போது அருகில் அமர்ந்திருந்த பாஜக தலைவர் அமித் ஷா, சரத் பவாருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.
குடியரசுத்தலைவர் பதவிக் கான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மீரா குமார் ஜூன் 28ல் மனு தாக்கல் செய்தபோது உடனிருந்த சரத்பவார், ஜிஎஸ்டி விவகாரத்தில் சுதந்திர நிலைப்பாடு எடுத்துள்ளார். ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் அதன் கூட்டணிக்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என தெரிகிறது.
இதுபோல, மேற்குவங்க முன்னாள் நிதியமைச்சரும், ஜிஎஸ்டி குழுவின் முன்னாள் தலைவருமான, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அசிம் தாஸ் குப்தாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணியின் ஒற்றுமை குலைந்துள்ளது 2-வது முறையாக அம்பலமாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.