

முத்தங்களில் எத்தனையோ வகை இருக்கலாம். ஆனால் இந்த வகை யாருமே சற்றும் எதிர்பாராதது.
கொல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிய பெண்ணை விசாரித்துக் கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் எதிர்பாராத வகையில், அப்பெண்ணிடம் இருந்தே முத்தங்களைப் பெற்றார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''30களின் இறுதியில் இருந்த அந்தப் பெண், ஒரு கொண்டாட்ட நிகழ்வை முடித்துவிட்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். போதை காரணமாக அவரால் ஒழுங்காக வண்டியை ஓட்ட முடியவில்லை.
உப்பு ஏரி அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் சாலையில் வந்துகொண்டிருந்த பெண், வண்டியை ஓட்டும்போதே மயக்க நிலைக்குச் சென்றார்.
அதனால் அங்கே இருந்த தடுப்பு மேல் மோதியவாறே கார் நின்றது.
அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அப்பெண் ஓட்டுநரைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.
அப்போது காவலர் ஒருவர் அப்பெண்ணையும், அவரின் இரண்டு நண்பர்களையும் காரில் இருந்து வெளியே இழுக்க முயற்சி செய்தார். ஆனால் திடீரென காவலரைத் தன் பக்கம் இழுத்த பெண், அவரை இறுக்கி அணைத்துக் கொண்டார். தொடர்ந்து அவர் மீது முத்த மழை பொழிந்துள்ளார்'' என்று தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணின் மீது கண்மூடித்தனமாக வண்டி ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.