

‘‘வரும் 2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக விருப்பம் இல்லை’’ என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாகக் கூறினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இருந்தவர் ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஷ்குமார். கடந்த மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தது. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தேஜ கூட்டணியில் இருந்து விலகினார் நிதிஷ்குமார்.
பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐஜத, ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி வைத்து பாஜக.வை எதிர்த்து போட்டியிட்டன. இதில் மெகா கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதல்வரானார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளன.
ஆனால், மெகா கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அத்துடன் நாடாளுமன்றத்தில் நடந்த ஜிஎஸ்டி அறிமுக விழாவை, காங்கிரஸ், ஆர்ஜேடி போன்ற கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், அந்த விழாவில் ஐஜத பங்கேற்றது. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கருத்து வேறுபாடுக்கு காரணம் என்ன என்பது குறித்து நிதிஷ்குமார் நேற்று வெளிப்படையாக கூறியதாவது:
எதிர்க்கட்சிகளிடம் எல்லோருக் கும் பொருத்தமான கொள்கை இருக்க வேண்டும். காங்கிரஸ்தான் பெரிய கட்சி. எனவே, அதற்கான செயல்திட்டத்தை கொண்டு வரும் வேலை அந்தக் கட்சிக்குத்தான் உள்ளது. அதிலும் எதிர்வினையற்ற திட்டத்தை உருவாக்க வேண்டியது காங்கிரஸ் வேலை. அப்படிப்பட்ட ஒரு திட்டம் எதிர்க்கட்சிகளிடம் தற்போதைக்கு இல்லை.
நாட்டில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலை நடக்கிறது, விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இதுபோன்ற பல முக்கிய விஷயங்கள் நடக்கும்போது, குடியரசுத் தலைவர் தேர்தலை அரசியலாக்குகின்றன.
வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக விருப்பம் இல்லை. பிரதமர் பதவிக்கு நான் பொருத்தமானவன் இல்லை. அந்தப் பதவிக்கு வர ஆசைப்படவும் இல்லை. நாங்கள் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்கள். அதுபோன்ற ஆசைகள் இருக்கக் கூடாது.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.