Last Updated : 02 Nov, 2014 11:25 AM

 

Published : 02 Nov 2014 11:25 AM
Last Updated : 02 Nov 2014 11:25 AM

பாஜக அரசு, புது மணப்பெண்: சிவசேனா கருத்து

மகாராஷ்டிராவில் பதவியேற்றுள்ள பாஜக அரசு புது மணப்பெண் போன்றது, அந்த அரசு முதலில் மாமியாரிடம் (மக்களிடம்) நற்பெயரை பெற முயற்சிக்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 288 உறுப்பினர்கள் கொண்ட அந்த மாநில சட்டசபையில் பாஜக- 122, சிவசேனா- 63, தேசியவாத காங்கிரஸ்- 41, காங்கிரஸ்- 42 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஆட்சியமைக்க 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 30-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். பாஜக அரசுக்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.இந்நிலையில் சிவசேனாவின் சாம்னா நாளிதழில் நேற்று வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிராவில் பதவி யேற்றுள்ள பாஜக அரசு புது மணப்பெண் போன்றது. அந்த அரசு முதலில் மாமியாரிடம் அதாவது மக்களிடம் நற்பெயரைப் பெற வேண்டும். அரசு தவறிழைத்தால் அதன் காதை மக்கள் திருகிவிடுவார்கள்.கடந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியின்போது மக்களுக்கும் அரசுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. பாஜக அரசு மக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.

புதிய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். மராட்டிய மன்னர் சிவாஜியின் ஆட்சியை நிறுவுவேன் என்று முதல்வர் உறுதியளித்தார். அதனை அரசு உறுதியுடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x