Last Updated : 12 Jul, 2017 08:30 AM

 

Published : 12 Jul 2017 08:30 AM
Last Updated : 12 Jul 2017 08:30 AM

தீவிரவாத தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி: கோயிலுக்கு செல்பவர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல்!

காஷ்மீர் மாநிலத்தில் கோடைகாலத் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ளது அமர்நாத் குகை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 12,800 அடி உயரத்தில் இருக்கிறது. இமயமலையின் ஒரு பகுதியான இந்த குகையில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பனிலிங்க தரிசனம் வெகு உற்சாகமாக நடக்கிறது. குகையின் மேல் பகுதியில் இருந்து உள்ளே கசியும் நீர், அதிக குளிரால் உறைந்து பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது. இதை சிவனின் வடிவமாகவும், இந்த பனிலிங்கத்தின் அருகே சற்று சிறிய அளவில் உருவாகும் லிங்கங்களை பார்வதி, விநாயகரின் அம்சமாகவும் கருதி வழிபடுகிறார்கள் மக்கள்.

இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்வதுபோல, கிறிஸ்தவர்கள் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது போல, ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை மேற்கொள்கின்றனர். கடந்த 2011-ல் அதிகபட்சமாக 6.34 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை சென்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. கடந்த 10-ம் தேதி வரையிலான 12 நாட்களில் மொத்தம் 1,46,692 பேர் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்த ஆண்டு பனிலிங்க தரிசனம் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

பிருகு முனிவர், காஷ்யப முனிவர் ஆகியோர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்ததாக புராணக் குறிப்புகளும், கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராணி சூர்யமதி இக்கோயிலுக்கு திரிசூலங்கள், பாணலிங்கங்கள் போன்றவற்றைக் காணிக்கையாக வழங்கியதாக வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.

அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவான பனி லிங்கம்.

ஜம்முவில் இருந்து பஹல்காம் அல்லது பால்டால் வழியாக அமர்நாத் செல்லலாம்.

பஹல்காம் வழி: ஜம்முவில் இருந்து பஹல்காம் 315 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பஹல்காமுக்கு டாக்ஸி, பேருந்தில் செல்லலாம். பஹல்காமில் இருந்து சந்தன்வாரிக்கு (16 கி.மீ.) மினி பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து நடக்கத் தொடங்கி பிஸு டாப், சேஷநாக், பஞ்சதர்ணி வழியாக அமர்நாத்தைச் சென்றடைய வேண்டும். இதற்கு 3 முதல் 5 நாட்கள் ஆகும். ஆனாலும், இதுதான் ‘சற்று’ எளிதான பாதை என்பதால், பெரும்பாலானோர் இந்த வழியாகவே செல்வார்கள்.

பால்டால் வழி: ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்று, சோனாமார்க் வழியாக பால்டால் செல்ல வேண்டும். அங்கிருந்து அமர்நாத்தைச் சென்றடைய வேண்டும். இதில் செங்குத்தான பாதையில் அதிகம் பயணிக்க வேண்டும். மட்டக்குதிரைகளுக்கும் இந்த வழியில் அனுமதி இல்லை. ஆனால், 2 முதல் 3 நாட்களில் சென்றுவிடலாம்.

காசி, ராமேசுவரம் போல தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது அமர்நாத் பனிலிங்கேஸ்வரரை தரிசித்துவிட வேண்டும் என்பதால், வயதையும் பொருட்படுத்தாமல் மூத்த தம்பதிகள் பலரும் இந்த யாத்திரையை மேற்கொள்கின்றனர். கர்ப்பிணிகள், 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் யாத்திரை செல்ல அனுமதி இல்லை.

மற்ற ஆன்மிக யாத்திரைகள்போல அமர்நாத் யாத்திரை எளிதானது அல்ல. பனி, குளிர் நிறைந்த, கரடுமுரடான, செங்குத்தான மலைப் பாதை என்பதால் மிகவும் கடினமான யாத்திரை இது. வெப்பநிலை திடீரென 5 டிகிரி செல்சியஸுக்கும் கீழே இறங்கிவிடக்கூடும் என்பதால், கம்பளி உடை, குடை, மழை கோட், குளிரில் ஈரமாகிவிடாத ஷூ ஆகியவை அவசியம்.

நுரையீரல் கோளாறுகள், சுவாசப் பிரச்சினை, இதயக் கோளாறு போன்ற எதுவும் இல்லை என்று மருத்துவரிடம் பெற்ற சான்றையும் இணைத்துதான் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியும். நடைபயணத்தை தொடங்கும் முன்பு முகாம் அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

யாத்திரைக்கு பக்தர்கள் தயாராவது ஒரு பக்கம் என்றால், இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் ‘ஸ்ரீஅமர்நாத்ஜி புனிதத்தல வாரியம்’ (Shri Amarnathji Shrine Board -SASB) மேற்கொள்ளும் பணிகள் தனி. ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் இதன் கவுரவத் தலைவராக செயல்படுகிறார். அமர்நாத் யாத்திரை நடக்கும் 3 மாத காலமும் பக்தர்கள் பாதுகாப்பாக யாத்திரை மேற்கொண்டு, பாதுகாப்பாகத் திரும்பும் வரையில் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு ஏற்பாடு, வாகன வசதிகள் உட்பட அனைத்து வகையிலும் சிறப்பான ஏற்பாடுகளை இந்த அமைப்புதான் செய்துதருகிறது.

யாத்திரை தொடங்கும் இடம் முதல் அமர்நாத் குகை வரையில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மத்திய போலீஸார், ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல இடங்களில் உணவு, தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

யாத்திரையின்போது விபத்து, மூச்சுத் திணறல் போன்ற அசம்பாவிதங்களால் உயிரிழப்புகள் அவ்வப்போது நடந்தாலும், தீவிரவாதத் தாக்குதல்தான் யாத்ரீகர்களுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 1991 முதல் 5 ஆண்டு காலத்துக்கு அமர்நாத் யாத்திரை தடை செய்யப்பட்டிருந்தது. 2000-ல் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அதேபோன்ற கோழைத்தனமான தாக்குதல் தற்போது மீண்டும் நடத்தப்பட்டிருக்கிறது.

குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்த பக்தர்கள் 60 பேர் அமர்நாத் யாத்திரை முடித்துவிட்டு பேருந்தில் 10-ம் தேதி திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் அனந்த்நாக் பகுதியைக் கடந்தபோது, பேருந்துக்கு வெளியே சரமாரியாக குண்டு சத்தம் கேட்டுள்ளது. தீவிரவாதிகள் சுற்றி வளைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, விரைவாக பேருந்தை ஓட்டியுள்ளார் ஓட்டுநர். ஆனாலும், பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இத்தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் பலியாயினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தியாவில் மிகப் பெரிய அளவில் நடக்கும் யாத்திரைகளில் மிக முக்கியமா னது அமர்நாத் யாத்திரை. சிறுவர்கள், இளைஞர்கள், வயதான தம்பதியர், ஏழை, பணக்காரர் என பல்வேறு தரப்பினரும் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள் கின்றனர். இத்தகைய அப்பாவி யாத்ரீகர் களைக் குறிவைத்து கோழைத் தனமான தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருப் பதற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந் துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x