

கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் வாதாடும்போது, “காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு அதிகளவில் நீர் திறந்துவிடுவதால் கர்நாடகா வறட்சியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை காலங்களில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் குடி நீருக்கே அல்லாட வேண்டி யுள்ளது.
ஆனால் தமிழகத்தில் கோடை காலத்திலும் நெல் சாகுபடி செய் யப்படுகிறது. நெல் சாகுபடிக்கு அதிகளவில் நீரை செலவிடுவதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். இந்த விவகாரத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் கருத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தின் மூலம் நீரின் தேவையை தமிழக அரசு குறைத்துக்கொள்ள முடியும்” என்றார்.
இதையடுத்து தமிழக அரசின் தரப்பில், “இவ்வழக்கில் கர்நாடக அரசு தெரிவிக்கும் வாதங்களை ஏற்க முடியாது. காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றுவதில்லை. குறிப்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய உத்தரவின்படி கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்” என முறையிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, “காவிரி விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்கெனவே போடப் பட்ட ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டி யுள்ளது. அதேபோல அண்மையில் வல்லுநர் குழு தாக்கல் செய்த உண்மை நிலையையும் ஆராய வேண்டியுள்ளது. ஆவணங்களில் இருக்கும் தகவல்களைக் கொண்டு மட்டுமே காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க முடியாது. எனவே களத்தில் உள்ள யதார்த்த நிலையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது” எனக்கூறி, வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.