

இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 2 ராணுவ வீரர்கள் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிரவாதி புர்ஹான் வானியின் நினைவு தினத்தை ஒட்டி காஷ் மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ் தான் ராணுவம் கடந்த 8-ம் தேதி பீரங்கி குண்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியது. இதில் அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களது 2 குழந்தைகள் காயமடைந்தனர்.
எல்லையில் தொடர் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியாவின் சாக்கா டா பாக், காரி கர்மாரா ராணுவ நிலைகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே பாகிஸ்தான் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதர் ஜே.பி. சிங்கை அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று நேரில் வரவழைத்து புகார் அளித்தது. அதில், இந்திய ராணுவ தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண் டும் என்றும் கோரப் பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்கள் வெளி யிட்டுள்ள செய்தியில், இந்திய ராணுவ தாக்குதலில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 5 பேர் உயி ரிழந்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
புர்ஹான் வானி நினைவுதினம்
பாகிஸ்தான் ஆதரவுடன் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பு காஷ்மீரில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் கமாண்டராக புர்ஹான் வானி என்பவர் செயல்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரதமர் நவாஸ் அஞ்சலி
அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்த நாட்டு ராணுவ தலைமைத் தளபதி காமர் ஜாவித் பஜ்வா ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நவாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் புர்ஹான் வானி தனது உயிரை தியாகம் செய்துள்ளார். காஷ்மீரில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. இதனை சர்வதேச சமுதாயம் கண்காணிக்க வேண்டும். ஐ.நா. தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தலை மைத் தளபதி காமர் ஜாவித் பஜ்வா வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ் மீரில் இந்திய ராணுவம் மனித உரிமைகளை மீறி வருகிறது. அப் பகுதி மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக மிக நீண்ட கால மாக போராடி வருகின்றனர். புர்ஹான் வானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டிருப்பது இந்திய ராணுவத்தின் அத்துமீறல் களை அம்பலப்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
புர்ஹான் வானிக்கு ஆதரவாக பாகிஸ்தானின் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டம், பேரணிகளும் நடைபெற்றன.
இந்தியா கடும் கண்டனம்
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்ப தாவது:
தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் அறிக்கைகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வாசித்து வருகிறது. இப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவித் பஜ்வா, தீவிரவாதி புர்ஹான் வானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதன்மூலம் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் பகிரங்கமாக ஆதரவு அளிப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கோபால் பாக்லே கூறியுள்ளார்.