மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு -மக்களவையில் 2 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு -மக்களவையில் 2 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு
Updated on
1 min read

அண்மையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் மக்களவை நேற்று காலை கூடியதும் தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் குஞ்சாலிக்குட்டி ஆகிய இருவரும் புதிய உறுப்பினர்களாக பதவியேற்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

பரூக் அப்துல்லா, குஞ்சாலிக்குட்டி ஆகிய இருவரும் முறையே ஸ்ரீநகர், மலப்புரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரூக் அப்துல்லா காஷ்மீரியிலும், குஞ்சாலிக்குட்டி ஆங்கிலத்திலும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகரும் குருதாஸ்பூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான வினோத் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் தனது 70-வது வயதில் இயற்கை எய்தினார். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே (60) கடந்த மே மாதம் காலமானார். இவர்களின் மறைவையொட்டி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கற் குறிப்பு வாசித்தார். காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலையும் அவர் கண்டித்தார். இதையடுத்து மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை

மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதை குறிப்பிடும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து பேசிய அவைத்தலைவர் ஹமீது அன்சாரி, கடந்த கூட்டத் தொடருக்கு பிறகு அவையின் 2 உறுப்பினர்கள் மற்றும் 6 முன்னாள் உறுப்பினர்கள் இயற்கை எய்தியை குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளியும் சிறந்த நாடாளுமன்றவாதியும் சிறந்த நிர்வாகியுமான அனில் மாதவ் தவே-வை நாடு இழந்துவிட்டது. சமூக செயற்பாட்டாளரான தவே, நர்மதை நதி பாதுகாப்புக்காக போராடியுள்ளார்” என்றார்.

மேலும் அவர், “தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட பி.கோவர்தன் ரெட்டி கடந்த ஜூன் 9-ம் தேதி தனது 79-வது வயதில் இறந்தார். சிறந்த நாடாளுமன்றவாதியான இவர், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய சமூக சேவகரும் ஆவார்” என்றார்.

மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர்களான அகிலேஷ் தாஸ் குப்தா, தாசரி நாராயண ராவ், பி.என்.சுகுல், இரா.செழியன், சி.நாராயண ரெட்டி, யு.கே.லட்சுமண கவுடா ஆகியோரின் மறைவு தொடர்பான குறிப்புகளையும் ஹமீது அன்சாரி வாசித்தார்.

இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கும் அவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வடமாநிலங்களில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும் ஹமீது அன்சாரி இரங்கல் தெரிவித்தார். பின்னர், அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in