

தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வருமான சகன் புஜ்பால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை வருமான வரித் துறை முடக்கி உள்ளது.
இது தொடர்பாக பிடிஐ வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது. பினாமி சொத்து கள் மீது வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4 மாத மாக சிறப்புக் குழு மேற்கொண்ட விசாரணையில், சகன் புஜ்பால் அவரது மகன் பங்கஜ் மற்றும் உறவினர் சமீர் ஆகியோர் பினாமி பெயரில் சொத்து வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
44 போலி நிறுவனங்கள் மூலம் சேர்த்துள்ள இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.223 கோடி ஆகும். எனினும் இதன் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.300 கோடி ஆகும். இவற்றை வருமான வரித் துறை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பினாமி சட்டத்தை மீறுவோ ருக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும் சம்பந்தப்பட்ட சொத்தின் மதிப்பில் 25 சதவீதம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநில எம்எல்ஏவாக உள்ள சகன் புஜ்பால் அவரது உறவினர் சமீர் ஆகிய இருவரும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இப்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.