Published : 14 Jul 2017 14:11 pm

Updated : 17 Jul 2017 12:12 pm

 

Published : 14 Jul 2017 02:11 PM
Last Updated : 17 Jul 2017 12:12 PM

உ.பி. சட்டப்பேரவையில் சக்திவாய்ந்த வெடிபொருள் தீவிரவாதிகளின் முதல் தேர்வு பிஇடிஎன் என்ஐஏ விசாரிக்க பேரவை பரிந்துரை

உத்தரபிரதேச சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப் பட்ட வெள்ளை நிற பவுடர், அபாயகரமான பிளாஸ்டிக் வெடி பொருள் எனத் தெரியவந்துள்ள தாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு பேரவை பரிந்துரை செய்துள்ளது.

உ.பி. சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் உறுப்பினர்க ளிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக கூறும்போது, “பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி இருக்கைக்கு அருகில் பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பவுடரை கடந்த புதன்கிழமை சுகாதார ஊழியர் ஒருவர் எடுத்தார். இந்த பவுடர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அந்த பவுடர் அபாயகரமான பிளாஸ்டிக் வெடிபொருள் (பென்டாஎரித் ரிட்டோல் டெட்ராநைட்ரேட்) எனத் தெரியவந்துள்ளது. இதை மோப்ப நாயும் கண்டுபிடிக்கத் தவறியுள்ளது.


அந்த வெடிபொருள் 150 கிராம் எடை இருந்தது. இந்த சட்டப் பேரவை கட்டிடத்தை தகர்க்க இந்த வெடிபொருள் 500 கிராம் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சட்டப்பேரவையின் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. பயங்கர தாக்குதல் நடத்தும் சூழ்ச்சியாகவே இது தெரிகிறது. இதை என்ஐஏ விசாரிக்க மாநில அரசு விரும்பு கிறது. மேலும் பேரவையில் பணி யாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களை போலீஸார் சோதனையிட விரும்புகிறோம். இது தொடர்பாக சபாநாயகர் உரிய முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து சபாநாயகர் எச்.என். தீட்சித் கூறும்போது, “இது பேரவையில் வழக்கமான கண்டனம் தெரிவிக்கும் விஷயம் அல்ல. உடனடியாக தகுந்த பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். வெடிபொருள் கைப்பற் றப்பட்டதன் பின்னணியில் உள்ள சதியை வெளிப்படுத்த என்ஐஏ விசாரணை தேவை என்பதை அனைவரும் ஏற்கிறோம்” என்றார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து பேசும்போது, “விமான நிலையங்களில் நம்மை சோதனை யிடுவதற்கு நாம் ஆட்சேபம் தெரி விப்பதில்லை. பேரவை பாதுகாப்பு தொடர்பாக ஒரு நடைமுறை உருவாக்குவது அவசியம். பேரவையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அதை தடுப்பதற்கு எந்த நடைமுறையும் இல்லை. நாட்டின் மிகப்பெரிய பேரவையாக உபி. பேரவை உள்ளது. ஒட்டுமொத்த நாடும் புதிய அல்லது நல்ல விஷயங்களுக்காக இப்பேரவையை உற்றுநோக்கு கிறது” என்றார்.

இதைத்தொடர்ந்து, வெடி பொருள் கைப்பற்றப்பட்டது குறித்து என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் அவை யில் ஒருமனதாக நிறைவேறியது.

முதல்வர் உரைக்கு பிறகு சட்டப்பேரவை பாதுகாப்பு தொடர் பான புதிய நடவடிக்கைகளை சபாநாயகர் அறிவித்தார்.

அப்போது அவர், “பேரவை பாதுகாப்பு தொடர்பாக நாம் ஏற்கெனவே எடுத்த முடிவின்படி, அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் நிறுத்தப்பட்டு, முழு அளவிலான உடற்பரிசோதனை கருவி (ஸ்கேனர்) பொருத்தப்பட வேண்டும்.

பேரவை வளாகத்தில் எம்எல்ஏக் களை தவிர அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களின் வாகனங்களுக்கு இனி அனுமதி இல்லை. எம்எல்ஏக் களின் ஓட்டுநர்கள் பரிசோதிக்கப் படுவார்கள். நுழைவு அனுமதி இல்லாத ஓட்டுநர்கள் அனுமதிக் கப்பட மாட்டார்கள். பேரவை ஊழியர்கள், அதிகாரிகளை போலீஸார் சோதனையிட அனுமதி அளிக்கப்படுகிறது. அவையில் சோதனை மேற்கொள்ள தீவிரவாத எதிர்ப்பு படையினருக்கு அனுமதி அளிக்கிறேன்” என்றார்.

இதையடுத்து சபாநாயகர் உத்தரவுப்படி அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்படும் என பேரவை விவகார அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா அறிவித்தார்.பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், “இதை மீறும் யாரையும் அவையில் அனுமதிக்கக் கூடாது” என்றார்.

ஒருவர் கைது

இதனிடையே வரும் சுதந்திர தினத்தில் உ.பி. சட்டப்பேரவையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக செல்போனில் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பர்ஹான் அகமது (20) என்ற இளைஞர் உ.பி.யின் தியோரியா மாவட்டத்தை சேர்ந்தவர். இவரிடம் உள்ளூர் போலீஸார் மற்றும் டெல்லி உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகளின் முதல் தேர்வு பிடிஇஎன்

பென்டாஎரித்ரிட்டோல் டெட்ராநைட்ரேட் (Pentaerythritol tetranitrate) அல்லது பிஇடிஎன் என்பது மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருளாகும். இது நைட்ரோகிளைசெரின், நைட்ரோசெல்லுலோஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். பேரழிவை ஏற்படுத்த விரும்பும் தீவிரவாதிகளின் முதல் தேர்வாக இந்த வெடிபொருள் உள்ளது.

பிஇடிஎன் தானாக வெடிக்காது. வெப்பம் அல்லது அதிர்வுகளை ஏற்படுத்தி இதை வெடிக்கச் செய்வதற்கு மற்றொரு உபகரணம் தேவை. எனினும் இதை வெடிக்கச் செய்வது எளிது.

ஜெர்மனி வெடிபொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றால் இந்த வெடிபொருள் முதல்முதலில் 1894-ல் தயாரிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. முதல் உலகப் போருக்கு பிறகு இந்த வெடிபொருள் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனைக்கு பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனினும் கள்ளச் சந்தையில் இது விற்கப்படுகிறது. பவுடர் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் ஆக இது வாங்கப்படுகிறது.

ராணுவம் மற்றும் சுரங்கத் தொழிலில் பிஇடிஎன் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்ரே மற்றும் பிற பாரம்பரிய உபகரணங்களால் இதை கண்டறிவது கடினம். பாதுகாப்பு சோதனைகளை கடந்து விடலாம் என்பதாலும் தீவிரவாதிகள் இதை பயன்படுத்துகின்றனர். 2011-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் 17 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிஇடிஎன் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
உ.பி. சட்டப்பேரவைவெடிபொருள்யோகி ஆதித்யநாத்என்.ஐ.ஏ. விசாரணைஇந்தியாஉத்தரப் பிரதேசம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x