கர்ணன் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கர்ணன் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
2 min read

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் ஜாமீன் மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், 6 மாத சிறை தண்டனையை அவர் அனுபவித்தே தீர வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது கொல்கத்தா சிறையில் உள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்.

இந்நிலையில் அவரது சார்பில் ஜாமீன் கோரியும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹார், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது..

அப்போது, கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், 6 மாத சிறை தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது.

ஏற்கெனவே கடந்த 21-ம் தேதியும் கர்ணன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு உத்தரவை மாற்ற முடியாது எனத் தெரிவித்து மனுவை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை பின்னணி:

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீ ஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை.

கடந்த 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் அவர் பதுங்கியுள்ளதாக கொல்கத்தா போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மாநகர காவல் துறையினரின் உதவியை அவர்கள் நாடினர்.

மேற்கு வங்க காவல் துறையைச் சேர்ந்த 3 தனிப்படையினர் மற்றும் கோவை மாநகர, மாவட்ட காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். கர்ணனின் செல்போனின் அழைப்புகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அவர் கோவை அருகே மலுமிச்சம்பட்டி யில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி போலீஸார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in