Last Updated : 16 Jul, 2017 09:58 AM

 

Published : 16 Jul 2017 09:58 AM
Last Updated : 16 Jul 2017 09:58 AM

தேச பக்தர் நரேஷ் சந்திர சக்ஸேனா

ம த்திய அமைச்சரவைச் செயலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரி நரேஷ் சந்திர சக்ஸேனா (82) ஐ.ஏ.எஸ். மறைந்துவிட்டார். இரண்டு தலைமுறை அரசியல் தலைவர்களைப் பார்த்தவர். வெவ்வேறு துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்த அவர், ஒன்பது பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். ‘தேச விரோதி’ என்று பத்திரிகைக் கட்டுரை ஒன்றில் பூடகமாகக் குறிப்பிடப்பட்ட அவர், மிகச் சிறந்த தேச பக்தர் என்பதைச் சொல்லாலும் செயல்களாலும் நிரூபித்திருக்கிறார். அவருடைய அண்ணன் கிரீஷ் சந்திர சக்ஸேனா, ‘ரா’ என்று அழைக்கப்படும் மத்திய அரசின் உளவுத் துறையில் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்தவர். அண்ணன் பெயருக்குப் பின்னால் சக்ஸேனா என்ற பின்னொட்டு இருப்பதால் தன்னுடைய பெயரை எப்போதும் நரேஷ் சந்திரா என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தார்.

டெல்லியில் இருந்தாலும் நியூயார்க்கில் இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. 1997-ல் ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது மன்ஹாட்டன் நகரில் ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். காலை 6 மணிக்குத் தொலைபேசி ஒலித்தது. அமெரிக்காவின் இந்தியத் தூதராக அப்போது பணியாற்றிய நரேஷ் சந்திரா எதிர்முனையில் இருந்தார். “நான் இங்கே இந்தியத் தூதராகப் பணிபுரிகிறேன்; உன்னுடைய பத்திரிகையிலோ என்னை ‘உளவாளி’ என்று குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருக்கிறீர்களே?” என்று கோபமாகக் கேட்டார். அன்றைக்கு அவர் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனைச் சந்திக்க ஐ.கே. குஜ்ராலுடன் செல்ல வேண்டும். ‘இந்தக் கட்டுரையை என்னுடைய சகாக்களும் அமெரிக்கர்களும் படித்திருப்பார்களே’ என்று அங்கலாய்த்தார்.

‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ அமைப்பாளரும் என்னுடைய நண்பருமான எஸ். குருமூர்த்தி அந்தக் கட்டுரையை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை, அணுகுண்டை வெடித்து சோதனை நடத்த நரசிம்ம ராவ் திட்டமிட்டு பொக்ரானில் ஏற்பாடுகளைச் செய்ததாகவும், கடைசி நேரத்தில் கிளிண்டன் நிர்வாகம் அதைத் தெரிந்துகொண்டு ஆட்சேபித்ததால் கைவிட்டதாகவும் எழுதப்பட்டிருந்தது. அமெரிக்கர்களுக்கு அந்தத் தகவலைக் கூறியது ஓர் உளவாளி என்று தெரிவிக்கும் கட்டுரை, அந்த உளவாளி நரேஷ் சந்திரா தான் என்றும் சுட்டிக் காட்டியிருந்தது. அந்தக் கட்டுரையின் புகைப்படப் பிரதியுடன் வருகிறேன் என்று நரேஷ் சந்திரா கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்பது அதே குடும்பத்தின் இன்னொருவரால் நடத்தப்படுவது, அந்த நாளிதழுக்கு நான் ஆசிரியர் அல்ல என்று அவரிடம் விளக்கினேன். “நீங்கள் என்னைச் சமாதானம் செய்கிறீர்கள், நான் எப்படி மற்றவர்கள் முகங்களில் விழிப்பது?’ என்று கவலையோடு கேட்டார். அவருக்கு என்னால் உதவ முடியவில்லை.

இதற்கான விடையைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தேடினேன். குஜ்ரால், வாஜ்பாய், நரசிம்ம ராவிடம் கேட்டேன். அனைவருமே புன்னகை புரிந்துவிட்டு, “இதை விடுப்பா” என்றே பதில் சொன்னார்கள். ஜஸ்வந்த் சிங், பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரும் நரேஷ் சந்திரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.

இந்தப் புதிரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் 2006-ல் நடந்த ஜஸ்வந்த் சிங்கின் புத்தக வெளியீட்டு மேடையில் நரேஷ் சந்திராவும் அமர்ந்திருந்தார். 1998 மே மாதம் பொக்ரானில் இந்தியா 5 அணுகுண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது தொடர்பாக சுவையாகப் பேசினார் நரேஷ் சந்திரா. ஜஸ்வந்த் சிங்கும் ராவ் அரசில் உளவாளி இருந்ததாகத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். நரேஷ் சந்திரா அந்த உளவாளியாக இருந்தால் அவரை அழைத்து மேடையில் அமர்த்தியிருப்பார்களா என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது.

நரசிம்ம ராவிடம் இதைப் பற்றிக் கேட்டபோதெல்லாம் தன்னுடைய வயிறைத் தட்டிக்காட்டி, ‘இந்த ரகசியம் இத்தோடு போகட்டும்’ என்பார். 1995 டிசம்பரில், நடை - பேட்டியின்போது இதே கேள்வியை மீண்டும் கேட்டேன். ‘சிதையில் என்னோடு சேர்ந்து எரிய சில ரகசியங்கள் இருக்கட்டும்’ என்று பதில் அளித்து என் வாயை மூடினார் ராவ். ஜஸ்வந்த் சிங்கின் 2006-ம் ஆண்டு புத்தகம் என்னுடைய தேடலைத் தீவிரப்படுத்த சில தகவல்களைச் சுட்டிக்காட்டியது. அதையொட்டி 3 கட்டுரைகளை எழுதினேன். ‘பேனைப் பெருமாளாக்குவது’, ‘அணுகுண்டை எப்படித் தயாரித்தோம்?’, ‘உளவாளியும் நரியும்’ என்ற தலைப்புகளில் அவற்றை வெளியிட்டேன். உளவாளி நரேஷ் சந்திரா, நரி வேறு யார் நரசிம்ம ராவ்தான். நரேஷ் சந்திராவுடன் ஒரு நாள் சில மணி நேரங்களைச் செலவிட்டேன், அப்படியும் அவர் எதையும் கூற மறுத்துவிட்டார். அந்தக் கட்டுரைகளில் நான் ஊகித்து எழுதியவற்றை அவர் மறுக்கவில்லை. நரசிம்ம ராவுக்கு உண்மையிலேயே அணுகுண்டை வெடித்துச் சோதனை நடத்துவதில் ஆர்வம் இல்லை. கிளிண்டன் நிர்வாகமும் அணுகுண்டு வெடிக்க வேண்டாம் என்று அவரை நிர்பந்தம் செய்தது.

அணுகுண்டை வெடிக்கத் தயாரானதாகவும் அதை கிளிண்டன் அரசு கண்டுபிடித்துவிட்ட தாகவும், அதனால் அந்த சோதனை முயற்சியை ரத்து செய்துவிட்டதைப்போலவும் நரசிம்ம ராவ் நாடகம் ஆடினார். அணுகுண்டு சோதனைக்கு இந்திய விஞ்ஞானிகளுக்குப் போதிய அவகாசம் கிடைப்பதற்காக இப்படிச் செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா இந்த ஏற்பாடுகளைச் செயற்கைக்கோள் புகைப்படங் கள் வாயிலாகவும் தங்களுடைய உளவு அமைப்பு கள் வாயிலாகவும்தான் தெரிந்து கொண்டது.

நாட்டின் நன்மை கருதி, இதில் உளவாளியைப் போலவே நரேஷ் சந்திராவும் நடித்திருக்கிறார்.

1989 மார்ச் 18-ல் டெல்லியின் புறநகர் பகுதியில் தில்பத் என்ற இடத்தில் இந்திய விமானப்படையின் போர் திறன் காட்சி விளக்கப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது நரேஷ் சந்திராவைத் தனியாக அழைத்துச் சென்ற ராஜீவ் காந்தி, “பாகிஸ்தான் வெகுவிரைவிலேயே அணுகுண்டு சோதனையில் இறங்கப்போவதால் அணு ஆயுதங்களைப் படையில் சேர்ப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

நரேஷ் சந்திரா ‘தேச பக்தர்’ என்று நான் கூறியது சம்பிரதாயமான இரங்கல் குறிப்பு அல்ல. அவரைக் கேள்வி கேட்டபோதுகூட நாட்டின் நலன் கருதி, உண்மையை அவர் சொல்லவில்லை. தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்து புத்தகமாகக்கூட எழுத அவர் முனையவில்லை.

இந்தியத் தாய் பெற்ற நாட்டுப் பற்றாளர்களில் முதல் வரிசையில் இடம் பெறுபவர் நரேஷ் சந்திர சக்ஸேனா.

சேகர் குப்தா

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x