

விஜய் மல்லையாவை கோர்ட்டில் ஆஜர் படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலே செல்ல முடியும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் இதுவரை ஆஜராகாததால் அவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கவுள்ள நிலையில், மல்லையா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவது அவசியம் அப்போதுதான் இந்த அவமதிப்பு வழக்கில் மேலே நகர முடியும் என்று வலியுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயெல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் மத்திய அரசு மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான தங்வள் தரப்பு முயற்சிகளை எடுத்துரைத்தது.
ஆனாலும் விஜய் மல்லையாவை கோர்ட்டில் ஆஜர் படுத்தும் போது தண்டனையை அறிவிப்பதாக கூறிவிட்டது. விஜய் மல்லையாவை கோர்ட்டில் ஆஜர் படுத்தாமல் இவ்வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்ல முடியாது என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் உள்ளது, விசாரணையானது டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டுவருவோம் என நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.