

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) மாலை பெங்களூரு சிறைத்துறை டிஐஜி டி.ரூபா காவல்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு அனுப்பிய அறிக்கையில் தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தகவல் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை முடியும்வரை பொறுமையுடன் இருங்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய செய்தி:
பெங்களூரு சிறைத்துறை டிஐஜி டி.ரூபா காவல்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு அனுப்பிய அறிக்கையில் தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
புதன்கிழமையன்று அவர் தாக்கல் செய்த அந்த அறிக்கையில், சிறைத்துறை எச்.எஸ்.சத்யநாராயண ராவ், அவரது அலுவல் உதவியாளரும் சசிகலா தரப்பிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனி சமையலறை..
சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே தற்காலிக சமையலிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு சமைத்துக் கொடுக்க சிறையில் இருக்கும் பெண்மணி ஒருவரை பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உள்துறை செயலருக்கும், ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.