Published : 20 Jul 2017 08:09 AM
Last Updated : 20 Jul 2017 08:09 AM

தொடர் விதிமுறை மீறல் எதிரொலி: சசிகலா விரைவில் வேறு சிறைக்கு மாற்றம்? - அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அப்துல் கரீம் தெல்கி, பிரபல தாதாக்கள் உள்ளிட்டோரை வேறு சிறைகளுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதையடுத்து கர்நாடக உள்துறை செயலர்கள் சுபாஷ் சந்திரா, பசவராஜ் உள்ளிட்டோர் சிறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து உள்துறை செயலர்கள் சுபாஷ் சந்திரா, பசவராஜ் ஆகியோர் சித்தராமையாவிடம், 'பெங்களூரு சிறையில் நிலவும் அசாதாரண சூழலின் காரணமாகவும், தொடர்ந்து விதிமுறையை மீறுவதாலும் சசிகலாவை கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். கர்நாடகா - தமிழகம் இடையே நட்புறவு நீடிக்காத நிலையில், சசிகலாவுக்கு ஏதேனும் அசம் பாவிதம் நேர்ந்தால் நிலைமை மோசமாகும்' எனத் தெரிவித்துள் ளனர். இதற்கு சித்தராமையா, ‘இந்த விவகாரத்தில் அரசுக்கு ஏதேனும் சட்ட சிக்கல் வருமா?' எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து உள்துறை அதிகாரிகள் நேற்று சட்ட செயலர், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவதால் அரசுக்கு ஏதேனும் பாதகம் உள்ளதா? அதனை சசிகலா எதிர்ப்பாரா? என ஆலோசித்தனர்.

அதற்கு சட்டவல்லுநர்கள், 'கர்நாடக சிறை நிர்வாக காரணங்களுக்காக சசிகலாவை மாநிலத்தில் வேறு எந்த சிறைக்கும் மாற்றலாம். சசிகலாவின் பாதுகாப்பை காரணம் காட்டி சிறை மாற்றம் செய்தால் அதில் நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. அதே வேளையில் சசிகலா தரப்பு தங்களின் வசதியை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளது. எனவே பெங்களூருவுக்கு அருகில் உள்ள‌ துமக்கூரு, மைசூரு ஆகிய சிறைகளை பரிசீலிக்கலாம். வேறு மாநில சிறைக்கு மாற்றுவதாக இருந்தால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்' என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக உள்துறை அதிகாரிகள் சித்தராமையாவுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதற்கு அவர், ‘‘சசிகலாவை பெங்களூருவில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ள சிறைக்கு மாற்றலாம். அதனால் அரசுக்கு எதிர்காலத்தில் எந்த சிக்கலும் வராது’’ என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தராமையாவின் முடிவைப் பொறுத்து சசிகலா விரைவில் வேறு சிறைக்கு மாற்றப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x