

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட எஸ்.பி.,க்கள் 3 பேர் பயணித்த காரை பின்தொடர்ந்து தீவிரவாதிகள் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர். உடனடியாக நடத்தப்பட்ட பதிலடியில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மற்றும் அவந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த எஸ்.பி.க்களான ரயீஸ் அகமது மற்றும் ஜாஹித் மாலிக் இருவரும், நேற்று கூடுதல் எஸ்.பி சந்தன் கோலியுடன் காரில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் போலீஸ் படையினரும் உடன் சென்றிருந்தனர். அப்போது பத்கம்போரா என்ற இடம் அருகே அவர்களது வாகனம் வந்தபோது, பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் 2 பேர் திடீரென அதிகாரிகளின் காரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து உஷாரடைந்த போலீஸ் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதேபோல் ஜம்முவில் மதகுரு ஒருவருக்கு தனிப்பட்ட பாதுகாவலராக பணியாற்றி வந்த அதிகாரி மீது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மிளகாய் பொடிகளைத் தூவி தாக்குதல் நடத்தினர். அவரிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியையும் பறித்துச் சென்றனர். இதையடுத்து ஜம்மு முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீஸாரை பழிவாங்கும் விதமாக மத்திய காஷ்மீரில் சதூரா பகுதியில் அமைந்துள்ள போலீஸ் எஸ்.ஐ சுபான் பட் என்பவரது வீட்டை தீவிரவாதிகள் அடித்து நொறுக்கினர். மேலும் அந்த வீட்டில் இருந்த அவரது மகனையும், உறவினர் மகனையும் காரில் கடத்திச் சென்று சிறிது நேரம் பிணைய கைதிகளாக வைத்திருந்தனர். பின்னர் இரு சிறுவர்களையும் விடுவித்த தீவிரவாதிகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய சுபான் பட்டின் காரையும் தீயிட்டு கொளுத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எஸ்.பி.வைத் தெரிவித்துள்ளார். சுபான் பட் சிறைத்துறையில் பணியாற்றி வருவதால் மாநிலம் முழுவதும் உள்ள சிறை களில் பணியாற்றி வரும் போலீ ஸாருக்கும், அவர்களது குடும் பத்தினருக்கும் உரிய பாது காப்பு வழங்குவதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட் டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 2-ம் தேதி ஜம்மு செல்லவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்த சம்பவங்களால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.