Last Updated : 31 Mar, 2016 02:39 PM

 

Published : 31 Mar 2016 02:39 PM
Last Updated : 31 Mar 2016 02:39 PM

கொல்கத்தா மேம்பாலம் இடிந்து 22 பேர் பலி: 78 பேர் படுகாயங்களுடன் மீட்பு, 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்

கொல்கத்தாவில் புதிதாக கட்டப் படும் மேம்பாலம் இடிந்து 22 பேர் உயிரிழந்தனர். 78 பேர் படுகாயங் களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

கொல்கத்தாவின் கிரிஷ் பூங்கா வில் இருந்து ஹவுரா பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கி.மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மார்க்சிஸ்ட் ஆட்சியின்போது 2008-ம் ஆண்டில் இதற்கான டெண்டர் விடப்பட்டு ஹைதராபாதை சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். லிமிடெட் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

ரூ.164 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை 2010 ஆகஸ்டில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பணப் பிரச்சினையால் மேம்பாலப் பணி தாமதமானது. சுமார் 5 ஆண்டுகளான நிலையில் தற்போது 76 சதவீத கட்டுமானப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அண்மைக்காலமாக பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

250 மீட்டர் பாலம் உடைந்தது

இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் புரா பஜார் பகுதியில் சுமார் 250 மீட்டர் நீளத் துக்கு மேம்பாலம் இடிந்து விழுந் தது. அந்த நேரத்தில் பாலத் தின் கீழே கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந் தன. பாதசாரிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனை வரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

பாலத்தின் கீழே ஏராளமான கடைகள் இருந்தன. அந்த கடைகளும் அப்பளமாக நொறுங்கின. போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த 5 போலீஸாரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் பல டன் எடையுள்ள இரும்பு தூண்கள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை தீயணைப்பு படையினரால் அகற்ற முடியவில்லை.

உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அதன்படி ராணுவத்தின் இன்ஜினீயரிங் பிரிவைச் சேர்ந்த 500 வீரர்கள் ராட்சத கிரேன் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் சம்பவ பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

முதல்வர் பிரச்சாரம் ரத்து

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் நேற்று தனது பயணத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு கொல்கத்தாவுக்கு திரும்பினார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம், பலத்த காயமடைந் தவர்களுக்கு ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட் சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவ சமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேம்பாலம் இடிந்த பகுதியை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மீட்புப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மேம்பால விபத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தப்பவிட மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரி ராய்சந்த் மோத்தா கூறியபோது, இதுவரை 78 பேரை படுகாயங்களுடன் மீட்டுள்ளோம். இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பிரவீண் பாக்ஸி கூறியதாவது: கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்க முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம். கடைசி நபர் மீட்கப்படும் வரை ராணுவ வீரர்கள் இங்கு தொடர்ந்து முகாமிட் டிருப்பார்கள். ராணுவ டாக்டர்கள், ஆம்புலன்ஸுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

ஒரு மினி பஸ், பல கார்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. அவற்றில் இருந்தவர்களை இன்னும் மீட்க முடியவில்லை. சில வாகனங்களின் பெட்ரோல் டேங்க் வெடித்து ஆங்காங்கே தீப்பிடித்தன. அவற்றை தீயணைப்புப் படை வீரர்கள் போராடி அணைத்தனர்.

இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர்.

மிகப்பெரிய இரும்பு தூண்கள், கான்கிரீட் தூண்கள் இடிந்து விழுந்திருப்பதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. கட்டிட இடிபாடுகளை முழுமையாக அகற்ற பல நாட்கள் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பிரதமர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கொல்கத்தா மேம்பால விபத்து அதிர்ச்சி அளிக்கிறது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கட்டுமான நிறுவனம் விளக்கம்

மேம்பால கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் ஹைதராபாதைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவன மூத்த அதிகாரி கே.பி. ராவ் கூறியதாவது:

பணியின்போது இரும்பு பாளம் ஒன்று நழுவி கீழே சரிந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு இரும்பு பாளம் சரிந்து விழுந்தது. இதன்காரணமாகவே விபத்து நேரிட்டுள்ளது. எங்கள் நிறுவன கட்டுமானங்களில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நேரிட்டதில்லை. இது கடவுளின் செயல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

விபத்து குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியபோது, கடந்த மார்க்சிஸ்ட் ஆட்சியின்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன, இந்த விபத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் பொறுப்பு என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதை மறுத்துள்ள மார்க்சிஸ்ட் வட்டாரங்கள், எங்கள் ஆட்சியில் மேம்பாலப் பணியை மேற்கொள்ளவில்லை. இந்த விபத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸே முழு பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ கூறியபோது, விபத்துக்கு திரிணமூல் அரசு முழுபொறுப்பேற்க வேண்டும், மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் பர்கத் ஹக்கீம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியபோது, அமைச்சர் பர்கத் ஹக்கீமை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x