

வரும் 2019 மக்களவை தேர்தலை குறி வைத்து பாஜக செயல்பட தொடங்கி இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள கட்சியின் நிர்வாகிகளை மாற்ற தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள் ளதாக தெரியவந்துளளது.
2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வீசிய ‘மோடி அலை’ 2019 தேர்தலிலும் எதி ரொலிக்கும் என பாஜக நம்புகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனவும் பாஜக எதிர்பார்க்கிறது. இந்த தேர்தல் முடிந்த பிறகே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளனர்.
அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள காந்த் சர்மா மற்றும் சித்தார்த்நாத் சிங் ஆகியோர் கட்சியின் தேசிய செயலாளராகவும் உள்ளனர். துணை முதல்வர் மவுரியா உ.பி. மாநில பாஜக தலைவராகவும் உள்ளார். எனவே, இவர்களின் கட்சிப் பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அமித் ஷா வுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களு டன் சேர்த்து நாட்டின் பிற மாநிலங் களைச் சேர்ந்த பாஜக தலைவர் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க அமித் ஷா திட்டமிட் டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, ‘தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங் களில் பாஜக வெற்றிபெற முடிய வில்லை. இந்த மாநிலங்களில் வெற்றி பெற, கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங் களுக்கும் புதிய கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்’ என தெரிவித்துள்ளன.
ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த ஏப்ரல் 16-ல் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 92 நாள் சுற்றுப்பயணத்தை அமித் ஷா தொடங்கியுள்ளார்.
பாஜக ஜனசங்கமாக இருந்த போது, அதை வழிநடத்துவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பால் அனுப்பி வைக்கப்பட்ட தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ‘விஸ்தார் யோஜ்னா (விரிவாக்கப் பயணம்)’ எனும் பெயரில் இந்த சுற்றுப்பயணம் நடத்தப்படுகிறது. இதன்மூலம், 2019 மக்களவை தேர்தலில் 11 கோடி உறுப்பினர் களின் உழைப்பை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்த முடியும் என பாஜக நம்புகிறது.
மேலும் ஒடிசா, குஜராத், தெலங் கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற் கொள்ளவும் அமித் ஷா திட்டமிட் டுள்ளார். அவரது இந்த பயணம் செப்டம்பர் வரை தொடர உள் ளது. அதன் பின் கட்சியின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.