

இந்தியாவின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் துறைமுகமான மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் 'ரேன்சம்வேர்' வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த முனையம் ஏபி- மோல்லர் மிட்யர்ஸ்க் என்னும் டேனிஷ் கப்பலால் இயக்கப்பட்டு வந்தது. சைபர் தாக்குதலால் அவற்றின் கணினிகள் பழுதடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஜவஹர்லால் நேரு துறைமுக தலைவர் அனில் டிக்கிகர், ''இந்தத் தாக்குதலால் சரக்குகளை முறைப்படுத்த மனித சக்தியையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் துறைமுகத்தின் பணிகள் மூன்றில் ஒன்றாகக் குறைந்துள்ளது.
உலகளாவிய சைபர் தாக்குதலால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாளில் நிலைமை சரியாகும் என்று நம்புகிறோம்.
சரக்குகளை நிரப்புவதிலும், இறக்குவதிலும் தாமதம் ஆவதால், துறைமுகத்துக்கு வெளியே ஏராளமான சரக்கு கப்பல்கள் நிற்கின்றன'' என்றார்.
கடந்த மே மாதத்தில் உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கணினிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டது 'ரேன்சம்வேர்' வைரஸ் தாக்குதல். இந்த தாக்குதலால் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கணினி சேவைகள் முடங்கின. இதனால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.