தூய்மை இந்தியா திட்டத்தினால் கிராமத்தினர் துன்புறுத்தப்படுகின்றனர்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

தூய்மை இந்தியா திட்டத்தினால் கிராமத்தினர் துன்புறுத்தப்படுகின்றனர்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கழிவறை கட்டாத வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது, திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் கிரிமினல் வழக்கு என்று ராஜஸ்தான் பாஜக அரசு கிராமத்தினரை பல்வேறு விதங்களில் துன்புறுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இது குறித்து கூறும்போது, “ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கழிவறைக் கட்டப்பட்டு முடிக்கப்பட்டதாக சான்றிதழ் பெற்ற குடும்பத்தினருக்கே ரேஷன் பொருட்களைப் பெற தகுதி என்று கூறியுள்ளது, இது அடிப்படை உணவுக்கான உரிமையை மீறுவதாக உள்ளது

மேலும், வேறு வழியின்றி திறந்தவெளியை கழிவறையாகப் பயன்படுத்துவோர் மீது அடக்குமுறை உத்திகளை ராஜஸ்தான் அரசு பயன்படுத்தி வருகிறது. மேலும் திறந்த வெளியை கழிவறையாகப் பயன்படுத்தினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் பாயும் என்று கிராமத்தினரை மிரட்டுகின்றனர்.

இது குறித்து ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பு சுமார் 1070 குடும்பங்களை சந்தித்தது. திறந்தவெளியைக் கழிவறையாகப் பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் மக்களுக்கு கடும் அசவுகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் நிறைய வீடுகளில் கழிவறை வசதி இல்லை, இப்பகுதிகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.

கழிவறைக் கட்ட வசதியில்லாத குடும்பத்தினரை அரசு இலக்காக்குவதால் குழந்தைகள் பள்ளியிலிருந்தும் கூட விலகி விடுவதும் நேரிடுகிறது.

மாநில அரசு கழிவறை கட்ட ரூ.12,000 அளிக்கிறது, ஆனால் கிராமப்புறங்களில் கழிவறை கட்ட ரூ.20,000 செலவாகிறது, மேலும் கழிவறைக் கட்டிய பிறகே பணம் அளிக்கப்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in